சுபாஸ்கரனின் லைக்கா மொபைலின் ஊழியர்களில் 90 வீதமானவர்கள் கிறிஸ்மஸ்சிற்கு முன்னதாக வேலை இழக்கும் ஆபத்து
சுபாஸ்கரனின் லைக்கா மொபைலின் ஊழியர்களில் 90 வீதமானவர்கள் கிறிஸ்மஸ்சிற்கு முன்னதாக வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் அண்மையில் நடைபெற்ற இரு தேசிய தேர்தல்களிலும் குறிப்பாக பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகளுக்கு கோடிக் கணக்கில் பணத்தை அள்ளி வீசியதாகக் கூறப்படும் பிரிட்டனில் வாழும் இலங்கை தமிழ் வர்த்தகப் பிரமுகரான அல்லிராஜா சுபாஸ்கரனுக்கு சொந்தமான பெரிய ரெலிக்கொம் நிறுவனமான லைக்கா மொபை லின் ஐக்கிய இராச்சிய ஊழியர்களில் 90 வீதமானவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு முன்னதாக வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
கம்பனி நிர்வாகத்தினால் இவ்வாரம் வெளியிடப்பட்டிருக்கும் அறிவித்தலின் பிரகாரம் ஐக்கிய இராச்சிய லைக்கா மொபைலின் 300 இற்கும் அதிகமான ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழக்கப் போவதாக தெரியவருகிறது.
இது தொடர்பாக பிரிட்டனின் முக்கியமான தினசரி த கார்டியன் உட்பட ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.
லைக்கா மொபைல் நிறுவனம் கோடிக் கணக்கில் பெறுமதி சேர் வரியை (வற்) வரியைச் செலுத்தாமல் ஏய்ப்புச் செய்த காரணத்தால் பிரிட்டனின் வருவாய் மற்றும் சுங்கத் திணைக்களத்துடன் பெரும் சர்ச்சக்குள்ளாகி இருப்பதுடன் அண்மைக் காலமாக நட்டத்தில் இயங்குவதாகவும் கூறப்படுகிறது.
பிரிட்டிஷ் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெருமளவில் நிதியை வழங்கி வந்த சுபாஸ்கரனின் கம்பனியின் மொபைல் தொலைபேசி சிம் அட்டைகள் குறைந்த வருமானம் பெறும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பாரிய கிராக்கியைக் கொண்டிருக்கிறது.
இந்த சிம் அட்டைகளைப் பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்துக்குள்ளும் வெளிநாடுகளுக்கும் மிகவும் குறைந்த செலவில் தொடர்பு கொள்ள முடியும்.
லைக்கா மொபைல் கடந்த வெள்ளிக்கிழமை லண்டன் நகரில் உள்ள அதன் தலைமையகத்தில் உள்ள ஊழியர்களுக்கு விடுத்த அறிவிப்பில் கம்பனி பாரதூரமான சவாலை எதிர்நோக்குவதாகவும் 316 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி ஐக்கிய இராச்சியத்தில் வெறுமனே 48 ஊழியர்களுடன் மாத்திரம் இயங்கப் போவதாகவும் கூறியிருக்கிறது.
லைக்கா குழுமத்தின் ஓர் அங்கமான பெல்ல கோசா நிறுவனத்தினால் 2019 ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனிப்பட்ட இரவு விருந்துபசாரம் ஒன்றில் கலந்துகொண்ட போறிஸ் ஜோன் சன் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக வருவதற்கான தனது முயற்சிக்கு அல்லிராஜா சுபாஸ்கரனின் நிதியுதவியை நாடியதாக வெளியான செய்திகளை அடுத்து பிரிட்டனின் பிரதமராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்று ஜோன்சனை தொழிற்கட்சி வர்ணித்திருந்தது.