கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை வைத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் பணித்துள்ளதாக சட்டத்தரணி நிறஞ்சன் தெரிவிப்பு.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அடிப்படையாக வைத்து அவர்களின் இறப்புக்கான காரணம், பால், வயது உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கி இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் பணித்துள்ளதாக சட்டத்தரணி நிறஞ்சன் தெரிவித்தார்.
புதைகுழி அகழ்வின் இறுதியில் ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை எடுத் துக்கொள்ளப்பட்டது. மாவட்ட நீதிவான் த.பிரதீபன் முன்னிலையில் அவரின் பிரசன்னத்துடன் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித ஓட்டுத்தொகுதிகள் அதனூடான பிற சான்றுப்பொருள்கள் பாரப்படுத்தப் பட்டன.
இடைக்கால அறிக்கை பேராசிரியர் றாஜ்சோமதேவவால் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 1994- 1996 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப் பகுதிக்குரிய எச்சங்களாக இவை இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பங்குபற்றுனர்களின் இறுதி அறிக்கைகளும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இறப்புக்கான காரணம், பால், வயது, உயரம் உட்பட பல விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும்.
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகளின் அறிக்கையும் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதுபோன்ற அறிக்கைகள் எல்லாம் கிடைக்கப்பெற்ற பின்னர் ஒட்டு மொத்த அறிக்கைகளை வைத்து தீர்மானத்துக்கு வரமுடியும் என்று நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் 8ஆம் திகதி மீண்டும் அழைக்கப்பட இருக்கின்றது.
காணாமற் போனோர் அலுவலகத்தின் பிரதிநிதிகளின் பிரசன்னத்தில் புதைகுழி முற்றுமுழுதாக மூடப்பட்டுள்ளது. சர்வதேச நியமங்களுக்கு அமைவாக புதைகுழியை மூடுமாறு நீதிமன்றின் கவனத்துக்கு நாங்கள் கொண்டு சென்றோம்.' மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள், தமிழீழ விடு தலைப் புலிகளின் உறுப்பினர்களின் உடலங்களாக இருக்கலாம் என்று நம் பப்படுகின்றது. கூடுதலாக பெண் போராளிகளின் உடலங்கள்தான் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதிகமானவர்களின் உடலங்களில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. குழிகளுக்குள்ளும் துப் பாக்கிச் சன்னங்கள் பாய்ந்துள்ளன. அதனைவிட பிற பொருள்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
ஆடைகள் கிழிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்தது. இங்கு ஒரு வன்முறை, துஷ்பிரயோகம், மனித உரிமைமீறல் நடந்தது என்று அப்பட்டமாக தெரிகின்றது. ஒட்டுமொத்த அறிக்கைகள் வந்ததன் பின்னர்தான் உண்மை துலங்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.
தொழில்நுட்ப வசதிகள் , சர்வதேச முறைகள் இலங்கையில் இல்லை என்பதை நாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.