வட்டியில்லாக் கடன் விடயத்தில் மாணவரை பலிக்கடா ஆக்காதீர்! சஜித் தெரிவிப்பு

5 months ago


வட்டியில்லா கல்விக் கடன் திட்டத்திற்கு இலங்கை வங்கி இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. இது குறித்து கல்வி அமைச்சர் தெரிவித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இந்த கடன் திட்டத்தில் கடன் பெற்ற 200 மாணவர்கள், குறித்த கடன் தொகைகளை திருப்பி செலுத்துவதில் குளறுபடி ஏற்படுத்தியுள்ளதாக கூறி, 8 ஆவது தொகுதியினருக்கு வட்டியில்லா கடன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சர் மீண்டும் தலையிட்டு தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

உயர் கல்வியில் ஆர்வமுள்ள இளைஞர்கள் தங்கள் சொந்த ஆற்றலாலும், சுயமுயற்சியாலும் சமூகத்தில் நல்ல வருமானத்தை ஈட்டிக்கொள்ள பாடுபடும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் இந்த வட்டியில்லா கடன் திட்டத்தை தன்னிச்சையாக நிறுத்தி வைப்பது இந்நாட்டு இளைஞர்களுக்கு இழைக்கப்படும் கடும் அநீதியாகும்.

கல்வியமைச்சர் இவ்விடயத்தில் முற்போக்கானவர். அவர் அறி வுறுத்தல்களை பிறப்பித்தும் அதிகாரிகள் அமைச்சரின் உத்த ரவைப் பின்பற்றாமல் அவர்கள் விரும்பியவாறு செயற்பட்டு வருவது கவலைக்கிடமான விடயம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பழைய மாணவர்கள் செய்த தவறுக்கு புதிய மாணவர்களை பலியாக்க வேண்டாம். இது தொடர்பில் உடனடியாக தலையிட்டு மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கல்வி அமைச் சரிடம் கோரிக்கை விடுத்தார். 

அண்மைய பதிவுகள்