பணத்தில் டீல் அரசியலும்கூட முன்னெடுக்கப்பட்டு வருவகிறது - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு
ஆட்சியாளர்களிடம் தமது தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப திட்டங்களை செயல்படுத்த பணம் இருந்தாலும் பாடசாலைகளில் உள்ள குறைபாடுகளை களைவதற்கு அவர்களிடம் பணம் இல்லை. போலி வேலைகளுக்கு முடிவில்லாது பணம் ஒதுக்கீடு செய்கின்றனர்.
இந்தப் பணத்தில் டீல் அரசியலும்கூட முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
குருநாகல், மாவத்தகம, பர கஹதெனிய தேசிய பாடசாலைக்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை கையளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், "பிரபஞ்சம் மற்றும் மூச்சுத் திட்டங்களை முன்னெடுத்து வரும்போது பாராளுமன்றத்திலும் வெளியிலும் என்மீது கோபத்தை வெளிப்படுத்தி குரோதம் காட்டுகின்றனர். நான் பிள்ளைகளுக்கு மது, போதைப்பொருள், சிகரெட்டைப் பகிர்ந்தளிக்கவில்லை.
கணினிகள், அகராதிகளையே பகிர்ந்தளிக்கிறேன். இவை தவறான விடயங்கள் அல்ல எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஆட்சியாளர்கள், தலைநகரின் ஆடம்பர குளிரூட்டி அறைகளில் இருந்துகொண்டு ஒரு குறிப்பிட்ட கும்பலுடன் டீலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நாட்டிலுள்ள சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் உயர் மட்டத்தை அடைவதை அவர்கள் விரும்பவில்லை. காலத்துக்கேற்ற நவீன கல்வியை வழங்காது, பழமைவாத கல்வியை வழங்குவதன் மூலம் இந்த பிள்ளைகளை அடிமைகளாக வைத்திருப்பதே அவர்களின் நோக்கம்.
புரட்சிகர கோஷங்களை எழுப்பும் கட்சிகள் அனைத்தும் தற்போது அரசாங்கத்துடன் டீலில் ஈடுபட்டுள்ளன.
மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்து மக்களையே காட்டிக் கொடுக்கும் அரசியல் கலாசாரம் இந்நாட்டில் காலகாலமாக இருந்து வருகிறது. இந் நிலையை மாற்றியமைப்போம்.
பணத்துக்காக பிள்ளைகளையும் மக்களையும் ஏமாற்றி அவர்களின் கொள்கைகளை காட்டிக் கொடுக்கும் அரசியலும், டீல் அரசியலும் நாட்டில் காணப்படுவதாக எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்தார்.