கனடாவில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பயங்கர நோய் பரவி வருகிறது - சுகாதாரத்துறை தெரிவிப்பு
கனேடிய ரொறன்றோவில், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பயங்கர நோய் ஒன்று பரவி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கனடாவின் ரொறன்றோவில், invasive meningococcal disease (IMD) என்னும் மூளைக்காய்ச்சல் ரக நோய் அதிகரித்து வருவாதாக மாகாண சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2002ஆம் ஆண்டுக்குப்பின் வழக்கமாக காணப்படும் தொற்று எண்ணிக்கையைவிட தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
13 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவர் உயிரிழந்துள்ளார்கள்.
வருடாந்தம் கனடாவில் இந்நோயினால் இருநூறு பேர்வரை பாதிக்கப்படுகின்றார்கள், அவர்களில் சுமார் பத்து வீதத்தினரை அந்நோய் காவு கொள்கிறது என்று மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன.
Invasive meningococcal disease (IMD) மெனிஞ்சைட்டிஸ் (meningitis) என்னும் இந்த தொற்று, Neisseria meningitidis என்னும் பாக்டீரியாவால் பரவும் நோய்த்தொற்றாகும்.
எச்சில் மூலமும், பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகுவதன் மூலமும் இந்நோய் பரவும்.
மூளையில் மீதுள்ள மெல்லிய உறை மற்றும் தண்டுவடம் வரையும், இரத்தக் குழாய்களுக்குள்ளும் இந்த தொற்று பரவக்கூடும்.
வேகமாக பரவி, அது மரணத்தையும் ஏற்படுத்திவிடக்கூடும். ஆனாலும், உரிய நேரத்தில் ஆன்டிபயாட்டிக் சிகிச்சை அளிப்பதன் மூலம், இந்த நோய்த்தொற்றை குணமாக்கவும் முடியும்.
இந்த நோயால் யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம் என்றாலும், ஐந்து வயதுக்குக் கீழுள்ள குழந்தைகள் மற்றும் தடுப்பூசி பெறாத பதின்ம வயதினர் மற்றும் இளம் வயதினரை இந்த நோய் அதிகம் பாதிக்கும்.
இந்த meningitis நோயின் அறிகுறிகளாவன, காய்ச்சல், உடல் வலி,மூட்டுவலி, தலைவலி, கழுத்து இறுகியது போன்ற உணர்வு மற்றும் வெளிச்சத்தைப் பார்க்க இயலாமை போன்றவையாகும்.
இந்த அறிகுறிகள் யாருக்காவது காணப்படுமானால், உடனடியாக அவர்கள் மருத்துவரைச் சென்று பார்க்குமாறு ரொரன்றோ சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.