தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இன்று முதல் ஒரு வாரத்துக்கு இரண்டு காற்றுச் சுழற்சிகள் உருவாகும்.-- புவியியல் துறை நா.பிரதீபராஜா தெரிவிப்பு
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இன்று(07) முதல் அடுத்த ஒரு வாரத்துக்குள் இரண்டு காற்றுச் சுழற்சிகள் உருவாகும் சாத்தியங்கள் உள்ளன என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
இன்று செவ்வாய்க்கிழமை புதிய காற்றுச் சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளது.
இது எதிர்வரும் 8ஆம் திகதி முதல் மேற்கு வடமேற்குத் திசை நோக்கி நகருமென எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய காற்றுச் சுழற்சி காரணமாக எதிர்வரும் 8ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதிவரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் சாத்தியங்கள் அதிகம் உள்ளன.
எதிர்வரும் 12ஆம் திகதிக்குப் பின்னரும் மழை தொடரும் சாத்தியங்கள் உள்ளன.
ஏனெனில், எதிர்வரும் 12ஆம் திகதி மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளது.
அடுத்த சில நாட்களின் பின்னரே இதனை உறுதிப்படுத்த முடியும்.
எனவே,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விவசாயிகள் மேற்குறிப்பிட்ட நாட்களைக் கருத்தில் கொண்டு தமது நெல், உழுந்து மற்றும் பயறு போன்ற அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது.
எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
எனவே, மீனவர்கள் இந்த நாள்களில் கடலுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது - என்றார்.