ஐந்து தேர்தல்களுக்கு போதுமான எழுதுபொருட்கள் அரச அச்சகத்தின் வசமிருப்பதாக அரச அச்சகர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர் பில் நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அவர் இதனை கூறினார்.
பொலிஸ்மா அதிபர் மற்றும் தபால்மா அதிபர் ஆகியோரும் இதில் கலந்து கொண்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த தேர்தல்களை விட இம்முறை அச்சிடும் செலவு 4 மடங்கு அதிகரிக்கும் என அரசாங்க அச்சகர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதிலிருந்து தேர்தல் முடியும் வரை அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என பொலிஸ்மா அதிபர் இந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் உட்பட ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சகல நடவடிக்கைகளையும் தடையின்றி மேற்கொள்வதாக தபால்மா அதிபர் உறுதியளித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க கூறியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் உள்ளிட்ட ஆவணங்களை அச்சிடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக அரச அச்சகர் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதி பதி தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதற்கான அதிகாரம் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு பின்னர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விற்கு கிடைக்கும். அதற்கமைய, இம்மாத இறுதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் திகதியை அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
(அ)