விடுதலைப் புலிகளை சட்டவிரோத அமைப்பு என்று ஏன் பிரகடனப்படுத்தக்கூடாது - இந்தியாவின் தீர்ப்பாயம் ஒன்று அறிவித்தல் விடுத்துள்ளது

6 months ago

தமிழீழ விடுதலைப் புலிகளை சட்டவிரோத அமைப்பு என்று ஏன் பிரகடனப்படுத்தக்கூடாது என்பதற்கான காரணங்களை விளக்கவேண்டும் என்று இந்தியாவின் தீர்ப்பாயம் ஒன்று அறிவித்தல் விடுத்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு விடுக்கப்பட்ட இந்த அறிவித்தலை புதுடில்லி மேல் நீதிமன்றில் இயங்கும் சட்டவிரோத செயல்பாடுகளை தடுக்கும் தீர்ப்பாயம் விடுத்துள்ளது.

இந்திய அரசு கடந்த மே மாதம் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை 5 ஆண்டுகளுக்கு நீடித்திருந்தது.

இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்திருந்த குறிப்பில், "2009ஆம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டாலும், சர்வதேச அளவில் அந்த இயக்கத்தின் செயல்பாடுகள் தொடர்கின்றன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயல்பாடுகள் இன்னும் இந்தியாவின் இறைமையை பாதிக்கும் வகையிலேயே அமைந்திருக்கிறது என்று கூறியிருந்தது.

ஏற்கனவே, விடுதலைப் புலிகள் இயக்கத்தை சட்டவிரோத அமைப்பு அல்லவென்று அறிவிக்குமாறு இந்த தீர்ப்பாயத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே கடந்த 14ஆம் திகதி தீர்ப்பாயம் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இதற்கு பதிலளிக்க 30 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பாயத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி நடக்கும் போது விடுதலைப் புலிகள் அமைப்பு சட்டத்தரணி ஊடாக தமது விளக்கத்தை அல்லது ஆட்சேபனையை தெரிவிக்க முடியும் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மைய பதிவுகள்