இலங்கையில் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஆழ்ந்த தாழமுக்கம் புயலாக வலுவடைந்துள்ளது.-- வளிமண்டலவியல் பிரிவு அறிவிப்பு
இலங்கையில் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த தாழமுக்கம் புயலாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது யாழ்.காங்கேசன்துறைக்கு வடகிழக்கே 280 கிலோ மீற்றர் தொலைவிலும் திருகோணமலைக்கு வடகிழக்கே 310 கிலோ மீற்றர் தொலைவிலும் நேற்று மாலை நிலை கொண்டிருந்தது.
மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்றைய தினம் இது சூறாவளி புயலாக வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு இடையே கடற்கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழையுடனான காலநிலை படிப் படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடமாகாணத்தில் சில பகுதிகளில்100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். அதேநேரம், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும்.
மாலை அல்லது இரவில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.