தமிழ் மக்களின் இறைமையும் சுயநிர்ணய உரிமையும் புதிய அரசமைப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் - பொதுக் கட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம்.

4 months ago


தமிழ் மக்களின் இறைமையும் சுயநிர்ணய உரிமையும் புதிய அரசமைப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தமிழ்ப் பொது வேட்பாளரின் சார்பில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

நேற்று செவ்வாய்க் கிழமை யாழ்ப்பாணம் நகரிலுள்ள வேட்பாளரின் பணிமனையில் வைத்து தமிழ்ப் பொது வேட்பாள ரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. இதில், தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அபிலாசைகள் மற்றும் எதிர்நோக் கும் பிரச்னைகளுக் கான தீர்வுகள் என 10 அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

அந்தத் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் மட்டும் வருமாறு,

தமிழர்களுக்கு பொருளாதாரப் பிரச் னைகள்தான் உண்டு என்று தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் கூறிவரும் பின்னணியில், இனப்பிரச்னையை பேசுபொருளாக்கி, அதன்மீது தென்னிலங்கையினதும் உலகத்தினதும் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் நாம் அரியநேத்திரனைப் பொதுவேட்பாள ராகக் களமிறக்கியிருக்கின்றோம்.

கடந்த 46 ஆண்டுகளாக தமிழர்கள் தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கே வாக்களித்து வந்திருக்கிறார்கள். இருப்பினும் அவர்களில் வென்றவர்களும் சரி, தோற்றவர்களும் சரி இன்று வரையிலும் இனப்பிரச்னைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வைத் தரவுமில்லை. இனவழிப்பு செயல்பாடுகளை நிறுத்தவுமில்லை.

கடந்த 46 ஆண்டுகளாக ஜனாதிபதித் தேர்தல்களில் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு பதில் வினையாற்றும் அணுகுமுறையில் இருந்து வேறுபட்டு இந்த முறை தமிழ்மக்கள் செயல் முனைப்போடு ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வது என்று எடுக்கப்பட்ட முடிவின் விளைவே தமிழ்ப் பொது வேட்பாளர் ஆகும். தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழ் மக்களை ஓரணியாகத் திரட்டுவார். இதேசமயம். இனப்பிரச்னைக்கான தீர்வை நோக்கித் தமிழ் மக்களின் கூட்டு விருப்பத்தை உலக சமூகத்துக்கும் தென் னிலங்கைக்கும் வெளிப்படுத்துவார். இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியையும் கோருவார். இந்த அடிப் படையில், தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பானது இனப் பிரச்னைக் கான நிரந்தர தீர்வானது பின்வரும் அடிப்படைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று உறுதியாக வலியு றுத்துகின்றது.

இனப்பிரச்னையைத் தீர்க்கும் நோக்கத்தோடு உருவாக்க வேண்டிய இலங்கைத்தீவின் புதிய யாப்பானது தமிழ் மக்களை இறைமையும் சுயநிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மக்களை ஒரு தேசிய இளமாக ஏற்றுக் கொண்டால்தான் இலங்கைத் தீவின் பல்லினத் தன்மையை உறுதிப்படுத்தலாம். எனவே புதிய யாப்பு ஆனது இலங்கைத் தீவின் பன்மைத் தேசியப் பண்பை உறுதிப்படுத்தும் விதத்தில் தேசங்களின் ஒன்றிணைவாக அமைய வேண்டும். அதாவது புதிய யாப்பானது இலங்கைத் தீவு ஒரு பன்மைத் தேசிய அரசாகக் கட்டமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்தவோர் அரசியல் தீர்வாலும் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாது.

இந்த விடயத்தில் தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதனை தாமே நிர்ணயிப்பதற்குப் பொருத்தமான பன்னாட்டு ஏற்பாடுகளைக் கோருவதற்கு உரித்துடையவர்கள்.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை யின் அடிப்படையிலான அலகானது ஒன்றிணைந்த தற்போதைய வடக்கு கிழக்கு மாகாணங்களை எல்லையாகக் கொண்டு அமைய வேண்டும். குறித்த சுயநிர்ணய அலகுக்குள் முஸ்லிம் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் தொடர்பில் திறந்த மனதோடு பேச்சு நடத்தத் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புத் தயாராக உள்ளது.

மலையகத் தமிழ் மக்களின் தனித்து வமான தேசிய இருப்பை நாம் அங்கீகரிக்கின்றோம். அந்த அடிப்படையில் அவர்களுக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்பட வேண்டும். மேலும் உடனடிப் பிரச்சினைகளுக்கு அவர்கள் தொடர்ச்சியாகக் கோரி வரும் தீர்வுகளும் வழங்கப்பட வேண்டும். இத்தீர்வுகளுக்கான போராட்டத்தில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பானது மலையகத் தமிழர்களோடு தோளோடு தோள் நிற்கும்.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறீ லங்கா அரசு நடத்திய இன அழிப்பு, போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் யாவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பன்னாட்டு நீதித்துறைக் கட்டமைப்புக்கூடாக முழுமையாகவும் முறையாகவும் விசாரிக்கப்பட்டு, பரிகார நீதி வழங்கப்படுவதுடன், இன அழிப்புச் செயற்பாடுகள் மீள திகழாமையை உறுதி செய்ய வேண்டும். இதுவரையிலுமான ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களின் தொகுக்கப்பட்ட அனுபவமாக ஐ. நா. பொதுச் செயலர் பொறுப்பு கூறலை ஐ. நா. பொதுச் சபையிடம் பாரப்படுத்துவதன் மூலம் இன அழிப்புக்கு எதிரான பன்னாட்டு விசாரணைகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றங்களிடம் பாரப்படுத்த வேண்டும்.

அபிவிருத்தியின் பெயரால் மேற் கொள்ளப்படும் நிலப் பறிப்பைத் தடுக்கவும் நமது வளங்கள் இன அழிப்பின் ஒரு பகுதியாகச் சுரண்டப்படுவதைத் தடுக்கவும் தமிழர் தாயகத்தின் தேசிய வளங்களை இயற்கையின் சமநிலை குலையாத வகையில் வினைத்திறனுடன் பயன்படுத்தவல்ல தற்சார்பு பொருளாதார கட்டமைப்புக்களை நாம் உருவாக்க வேண்டும். இதற்கேற்ற வகையில் தமிழர் தாயகத்தின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு புலம் பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளையும் உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீடு களையும் உள்வாங்கும் அதிகாரம் தமிழர் தேசத்துக்கு இருக்க வேண்டும். தமிழ் கடலில் தமிழ் மீனவர்களுடைய கடல் இறைமை உறுதி செய்யப்பட வேண்டும்.

ஒரு நிரந்தரத் தீர்வைக் கண்டடை வதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத்தோடும். தமிழர் தேசத்தின் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கத்தோடும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக் கென்று பன்னாட்டு சமூகத்தின் மேற் பார்வையின்கீழ் விசேட இடைக்காலப் பாதுகாப்பு ஏற்பாடு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் நிலைப்பாட்டை ஏற்றுத் தமிழ் மக்கள் இதுவே தமது பொது நிலைப்பாடு என்று உலகுக்கும் தென்னி லங்கைக்கும் வெளிக்காட்ட பொதுக் கட்டமைப்பின் பொது வேட்பாளரான பா. அரியநேத்திரனின் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று அன்புரிமையோடு வேண்டி நிற்கின்றோம்.

பொதுவேட்பாளர் ஜனாதிபதியாக வருவதற்காக முன் நிறுத்தப்படவில்லை. அவர் தமிழ் மக்களை ஒன்று திரட்டுவ தற்காகவும், கட்சிகளை ஒன்றிணைப்பதற்காகவும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருமித்த குரலில் ஒலிக்கச் செய்வதற்காகவுமே முன் நிறுத்தப்படுகிறார். ஒன்று திரண்ட தமிழ் மக்கள் உலகத்தின் முன்னும் தென்னிலங்கையின் முன்னும் பலமாக நிமிர்ந்து நிற்பார்கள். அதாவது, அரியநேத்திரனுக்கு வழங்கப்படும் வாக்குகள் தமிழ் மக்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கும் வாக்குகள்தான். தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்தவர்களைக் கெளரவிக்கும் வாக்குகள்தான். எனவே தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது தமிழ் மக்களின் தேசியக் சுடமையாகும் - என்று குறிப்பிடப்பட்டுள்ளது.