மட்டக்களப்பில் பெண் தலைமை தாங்கும் குடும்பப் பெண்களால் முன்னெடுக்கும் 'பிறிட்ச் மார்க்கெற்' இனந்தெரியாதோரால் தீக்கிரை

1 week ago



மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பப் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் 'பிறிட்ச் மார்க்கெற்' நேற்று (28) இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நஞ்சற்ற உணவு வகைகளை விற்பனை செய்யும் ஒரு சந்தையாக காணப்பட்ட இந்தச் சந்தையில் சுமார் 12 வருடங்களாக 30 பெண் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் வியாபாரம் செய்து வருகின்றனர்.

தமது வாழ்வாதாரத்துக்காக நாளாந்தம் மரக்கரி, அரிசி, அரிசி மா, தேன், நெய், கருவாடு போன்ற உள்ளூர் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்து தமது வாழ்வாதாரத்தை ஈட்டி வந்த நிலையிலேயே இந்த நாசகார செயல் இடம்பெற்றுள்ளது.

நாளாந்தம் காலை 7 மணி முதல் பிறபகல் 2 மணி வரை வியாபார நடவடிக்கையில் இவர்கள் ஈடுபடுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து பிற்பகல் வேளையில் குறித்த பகுதியில் மரக்கறி, பழவகை போன்ற பொருள்களை வெளியிடத்து வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு இந்த நாசகார செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும். மனநலம் பாதிக்கப்பட்டவராக சொல்லப்படும் நபரொருவரை மட்டக்களப்பு தலைமைய பொலிஸார் விசாரணைகளுக்காக அழைத்து சென்றுள்ளனர் என்று மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களாகக் குறித்த சந்தைக்கு அருகாமையில் இருந்த பொலிஸ் காவலரணில் இருந்த பொலிஸாரின் கடமை நிறுத்தப்பட்டதன் பின்னர் இந்தப் பகுதியில் குற்றச் செயல்களும், போதைப் பொருள் பாவனையாளர்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளன என்று அந்தப் பகுதியில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் தமக்கான நீதியை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.