நிலக்கடலை மதிப்புக்கூட்டல் அலகு முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் முல்லை அக்கிரி பிஸ்னஸ் லிமிடெட் நிறுவனத்தில் இன்று ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.

2 months ago


விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், வடமாகாணத்தில் முதன்முறையாக முழுமையாக இயந்திர மயமாக்கப்பட்ட நிலக்கடலை மதிப்புக்கூட்டல் அலகு முல்லைத்தீவில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் முத்துவிநாயகர்புரத்தில், முல்லை அக்கிரி பிஸ்னஸ் லிமிடெட் (Mullai Agri Business Ltd) நிறுவனத்தில் இன்று வியாழக்கிழமை (06.02.2025) வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 

ஒட்டுசுட்டான் நிலக்கடலை உற்பத்தியாளர் சங்கம் முல்லை அக்கிரி பிஸ்னஸ் லிமிடெட் ஆக மாற்றப்பட்டு விவசாயிகள் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக்கப்பட்டு இயங்கி வருகின்றது.

இந்த நிறுவனத்தின் உற்பத்திகள் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில் சந்தை கேள்விகளை ஈடுசெய்ய முடியாத நிலைமை இருந்து வந்தது.

தற்போது உழவு, நாற்று நடுகை, அறுவடையிலிருந்து பொதி செய்தல் வரையில் இயந்திரமயமாக்கப்பட்டுள்ள நிலையில் சந்தைக் கேள்விகளை ஈடுசெய்யக் கூடியளவு உற்பத்திகளை மேற்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கும் தொழில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.  

இந்த நிகழ்வில் முல்லை அக்கிரி பிஸ்னஸ் லிமிடெட்டின் நிறைவேற்று அதிகாரி தனது உரையில், விவசாயிகளுக்கு இரு வழி வருமானத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

விவசாயிகள் தமது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் போது இலாபத்தைப் பெற்றுக் கொள்வார்கள் எனவும் நிறுவனத்தின் லாபம் விவசாயிகளுக்கும் பங்கிடப்படும் போது அதிலும் ஓர் இலாபத்தை விவசாயிகள் பெற்றுக் கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டார். 

'முத்தையன்கட்டுக்குளம் இலங்கையில் வித்தியாசனமான ஒன்றாக கடந்த காலங்களில் விளங்கியது.

இது மாத்திரமே மேட்டு நிலப் பயிர்ச்செய்கையை இலக்கு வைத்து செயற்பட்டது.

ஆனால் தற்போது நெல்லை முதன்மைப்படுத்தியதாக மாறிவிட்டது.

தற்போது நிலக்கடலையை விவசாயிகள் பயிரிடத் தொடங்கியிருக்கின்றார்கள்.

நான் பல தடவைகள் இந்த மாற்றத்துக்காக விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தேன்.

கடந்த காலங்களில் விவசாயக் கூலி காரணமாக பெருமளவு உற்பத்திச் செலவு ஏற்பட்டது.

இப்போது அனைத்துமே இயந்திரமயமாகியிருப்பதால் அண்ணளவாக 60 சதவீதம் உற்பத்திக்கான செலவு குறைவடைகின்றது' என விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டார். 

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஏனைய நிறுவனங்களில் உற்பத்தியின் தரக்கு நிகராக இந்த நிறுவனம் தனது பொருட்களை உற்பத்தி செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டிய முல்லைத்தீவு மாவட்டச் செயலர், ஏனைய நிறுவனங்களில் விலைகளை விடவும் குறைவான விலையில் இவர்கள் சந்தைப்படுத்துவதால் நுகர்வோரை அதிகம் சம்பாதித்துக்கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் இலங்கையிலேயே முதல் தடவையாக, விவசாயிகள் தங்கள் உற்பத்திப்பொருட்களை தாங்களே பெறுமதிசேர் பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்தும் மாதிரியாக இது அமைந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டினார். 

'கடந்த காலங்களில் சங்கங்கள், கூட்டுறவு அமைப்புக்கள் என்ற பெயருடன் விவசாய அமைப்புக்கள் இயங்கினாலும் அவற்றால் தொடர்ந்து செயற்பட முடியவில்லை.

தற்போது விவசாய கம்பெனி என்ற நாமத்தின் கீழ் அவை இயங்கத் தொடங்குகின்றன.

கம்பெனி என்றாலே இலாப நோக்கத்துக்குரியது.

இப்போதுதான் சரியான தடத்துக்கு விவசாய அமைப்புக்கள் வந்துள்ளன' என்று வடமாகாண பிரதம செயலர் குறிப்பிட்டார். 

பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் தனது உரையில்,

வடக்கு மாகாணத்தில் அனைத்து வளங்களையும் கொண்ட செழிப்பான மாவட்டம் என்றால் அது முல்லைத்தீவுதான்.

ஆனால் அந்த வளங்களை நாங்கள் உரியமுறையில் பயன்படுத்தவில்லை.

1970 ஆம் ஆண்டுகளில் முத்தையன்கட்டுகுளத்தின் கீழ் வெங்காயம், செத்தல் மிளகாய் என்பன செய்கை செய்யப்பட்டன.

ஆனால் கால ஓட்டத்தில் விவசாயிகள் அதனைக் கைவிட்டுவிட்டார்கள்.

விலையில் உறுதிப்பாடு இல்லாமையால் தான் அந்த நிலைமை நேர்ந்தது.

தற்போது இப்படியான விவசாய கம்பனிகள் ஊடாக உறுதியான விலையில் விவசாயிகளிடமிருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது சிறப்பான நடவடிக்கை.

விவசாய அல்லது கடல்சார் உற்பத்திப் பொருட்களை அப்படியே ஏற்றுமதி செய்யாமல் பெறுமதி சேர் பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்யும்போது பலருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதுடன் விவசாயிகளின் வாழ்க்கைத்தரமும் உயர்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன.

இந்த நிறுவனத்துக்கு வெளிநாடுகளுக்கு பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு விரைவில் கிடைக்கும் என நம்புகின்றேன்.

இலங்கையின் முதல் தர நிறுவனமாக இந்த நிறுவனம் வரவேண்டும். 

தற்போதைய அரசாங்கம் வடமாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் நேரான சிந்தனையுடன் இருக்கின்றது.

இந்தக் காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

விவசாயத்தை ஊக்குவிப்பது தொடர்பிலும் சிறப்புக் கவனம் செலுத்துகின்றது.

எனவே விவசாயத்துறையை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

குறிப்பாக ஏற்றுநீர்பாசனத்தை நாங்கள் மீண்டும் நூறு சதவீதம் ஆரம்பிக்க வேண்டும்.

அப்போதுதான் மேட்டுநிலப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க முடியும், என்று ஆளுநர் குறிப்பிட்டார்.