பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்படும் ஆபத்து!
இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளிட்ட ஆறு தமிழ்க் கட்சிகள் ஒன்றுசேர்ந்து ஓரணியில் போட்டியிடுவதென கடந்த வியாழக்கிழமை இரவு காரைதீவில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனினும் 24 மணிநேரத்துக்குள் இலங்கை தமிழரசுக் கட்சி தனிவழி போகத் தீர்மானித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தங்களது தலைமையில் ஓரணியில் ஒன்று சேருமாறு கோரி, வேட்புமனு விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுள்ளது.
அதேபோன்று ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈரோஸ் போன்ற கட்சிகளும் ஏனையவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில் தமிழரசுக் கட்சியானது தேசியப் பட்டியல் ஆசனமொன்றுக்காக திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இரு பிரதிநிதிகளை இழக்கும் நிலையினை ஏற்படுத்தப் போவதாகவும், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஊடாக சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதியும், முன்னாள் எம். பியுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் பிரிந்து நிற்பதால் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இழந்துவிடும் நிலை இருக்கிறது.
எனவே, அங்கு தமிழ்ப் பிரதிநித்துவத்தைக் காப்பாற்றுவதற்கான இரண்டு வழிமுறைகளை தமிழரசுக் கட்சிக்கு கூறியிருக்கின்றோம்.
இருதரப்பும் இணைந்து வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் போதே அந்த பிரதிநித்துவம் காப்பாற்றப்படும்.