வடமாகாணத்தில் போருக்குப் பின்னர் 100.909 காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கியதாக காணி ஆணையாளர் அலுவலகம் தெரிவிப்பு

4 hours ago



வடக்கு மாகாணத்தில் போருக்குப் பின்னர் ஒரு லட்சத்து 909 காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் 2013 ஆம் ஆண்டில் இருந்து 2024 ஆம் ஆண்டு வரையில் விநியோகித்த காணி அனுமதிப் பத்திர எண்ணிக்கை தொடர்பில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விண்ணப்பத்திற்கு வழங்கிய பதில் ஒன்றிலேயே இந்த எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய வடக்கில் உச்சப் பட்சமாக வவுனியா மாவட்டத்தில் 30 ஆயிரத்து 39 அனுமதிப் பத்திரங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 29 ஆயிரத்து 488 அனுமதிப் பத்திரங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 19 ஆயிரத்து 801 அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் 17 ஆயிரத்து 496 காணி அனுமதிப் பத்திரங்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 85 அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் பிரதேச செயலாளர் பிரிவு ரீதியில் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் 15 ஆயிரத்து 791 அனுமதிப் பத்திரங்களும். கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 11 ஆயிரத்து 307 அனுமதிப் பத்திரங்களும், கரைத்துரைப்பற்றில் 8 ஆயிரத்து 720 காணி அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஒட்டுசுட்டானில் 6 ஆயிரத்து 812 அனுமதிப் பத்திரங்களும், வவுனியா வடக்கில் 6 ஆயிரத்து 630 அனுமதிப்பத் திரங்களும், செட்டிகுளத்தில் 6 ஆயிரத்து 560 அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளமையோடு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 6 ஆயிரத்து 23 அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.