இந்தியா - இலங்கை கூட்டு செயல்குழுவின் 6ஆவது கூட்டத்தில் கடற்தொழிலாளர்களின் பிரச்சினை தீர்வுக்கு முன்னுரிமை அளிக்க தீர்மானம்
இந்தியா - இலங்கை கூட்டு செயல்குழுவின் 6ஆவது கூட்டத்தில் கடற்தொழிலாளர்களின் பிரச்சினை தீர்வுக்கு முன்னுரிமை அளிக்க தீர்மானம்
இலங்கை - இந்திய கடற் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை அளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் தொடர்பான இந்தியா - இலங்கை கூட்டு செயல்குழுவின் 6ஆவது கூட்டம் நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், இந்திய அரசாங்கத்தின் இந்திய மீன்வளத் துறையின் செயலர் அபி லக்சி லிகி தலைமையிலான இந்திய குழுவும், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மேலும், இந்திய வெளி விவகார அமைச்சு, தமிழ்நாடு அரசு கடற்படை, கடலோர பொலிஸார், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.
அத்துடன், இலங்கையின் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம், கடற்படை, கரையோர காவல்படை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
இதன்போது, கடற்றொழிலாளர் மற்றும் கடற்றொழில் துறை தொடர்பான அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விரிவான மீளாய்வை மேற்கொள்ளப்பட்டதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கைக் காவலில் உள்ள இந்திய கடற் தொழிலாளர்களும் அவர்களின் படகுகளையும் விரைவில் விடுவிக்குமாறு இலங்கை அரசை இந்தியத் தரப்பு இந்த சந்திப்பின்போது வலியுறுத்தியுள்ளது.