மியன்மார், ரஷ்யா, டுபாய், ஓமன் ஆகிய நாடுகளில் மனிதக் கடத்தலில் சிக்கித் தவித்த பல இலங்கையர்கள் மீட்பு. அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவிப்பு.

4 months ago


மியன்மார், ரஷ்யா, டுபாய், ஓமன் ஆகிய நாடுகளில் மனித கடத்தல் காரணமாக சிக்கித் தவித்த பல இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது-

மியன்மார் மற்றும் தாய்லாந்துடனான பேச்சின் பலனாக, 'சைபர்' குற்றங்களுக்காக மியன்மாரில் சிறை வைக்கப்பட்டிருந்த 55 இலங்கையர்களில் 28 பேரை இதுவரை விடுதலை செய்துள்ளோம். எஞ்சியுள்ளவர்களை விரைவில் மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களில் சுமார் 70 பேரை மீண்டும் இந்த நாட்டுக்கு அழைத்து வர நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை பெற்றுத்தர நாங்கள் செயற்பட்டோம்.

டுபாய், ஓமான் போன்ற நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் சென்று நிர்க்கதியாக இருந்தவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு வெளிவிவகார அமைச்சு செயற்பட்டது.

அத்தகைய நடவடிக்கைகளுக்கு சரியான வெளி நாட்டுக் கொள்கைகள் நிச்சயமாக இன்றியமையாத காரணியாகும். மேலும் அதற்கு ஒரு சிறப்பான குழுவும் தேவை.

எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி அந்தக் குழுவினரை வெளிநாட்டு சேவையில் ஈடுபடுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எமது அமைச்சுக்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளார். எனவே, நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது- என்றார்.