பொலிஸ் செயற்பாடுகளை காணொளி காட்சிப்படுத்த மக்களுக்கு அனுமதி.-- பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவிப்பு
பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை காணொளி காட்சிப்படுத்துவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பின் (Colombo) புலனாய்வு ஊடக இணையத்தளம் ஒன்றின் தகவல்படி, சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பொதுமக்களின் இத்தகைய நடவடிக்கைகளை சட்டவிரோதமானதாகவோ அல்லது சட்டத்திற்கு எதிரானதாகவோ கருதக்கூடாது என பதில் பொலிஸ் மா அதிபர் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், பொதுமக்களால் காட்சிப்படுத்தப்படும் காணொளிகள் நாட்டின் சட்டங்களின்படி, குற்றங்கள் மற்றும் சிவில் வழக்குகளில் ஆதாரமாக பயன்படுத்தப்படலாம் என்றும் பதில் பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.
அண்மையில் குருநாகல் -வாரியபொல பிரதேசத்தில் விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் (Lohan Ratwatte) வாகனத்தை காணொளிப்படுத்தியமைக்காக, பொலிஸ் அதிகாரி ஒருவரை அச்சுறுத்திய சம்பவத்தின் பின்னணியில் பதில் பொலிஸ் மா அதிபரின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குறித்த பொலிஸ் அதிகாரியின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத்தும் கண்டனம் தெரிவித்திருந்தார்.