சிறுபான்மையின மக்களின் கருத்துக்கள் உள்வாங்குவதை உறுதிசெய்ய வேண்டும்.-- தேர்தல் கண்காணிப்புக் குழு ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் வலியுறுத்து

1 month ago



எதிர்கால மோதல்களைத் தவிர்க்கும் வகையில் சிறுபான்மையின மக்களின் கருத்துக்கள் அர்த்தமுள்ள விதத்தில் உள்வாங்கப்படுவதை உறுதிசெய்வதற்கு ஏதுவாக சமாதான மற்றும் நல்லிணக்க முயற்சிகளை இலங்கை அரசாங்கம் மேலும் வலுப்படுத்த வேண்டும் என பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக்குழு நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அதன் இறுதி அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் கடந்த செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்றது.

இத் தேர்தல் சுதந்திரமானதும், நியாயமானதுமான முறையில்  நடைபெறுகின்றதா என்பதைக்  கண்காணிப்பதற்காக தேர்தல் ஆணைக் குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இணங்க இலங்கைக்கு வருகை தந்த சிஷேல்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டெனிபோர் தலைமையிலான 13 பேரடங்கிய பொதுநலவாய அமைப்பின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் நாட்டின் சகல தேர்தல் மாவட்டங்களுக்கும் விஜயம் மேற்கொண்டனர்.

தேர்தலுக்கு முன்னரான பிரசார காலப்பகுதி, தேர்தல் தினத்தன்று நடைபெறும் செயன்முறைகள், தேர்தல் முடிவடைந்ததன் பின்னரான நிலைவரம் என்பவற்றைப் பரந்துபட்ட ரீதியில் கண்காணித்தனர். 

அக் கண்காணிப்பு நடவடிக்கைகளின் முடிவில் அவதானிக்கப்பட்ட விடயங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

கடந்த செப்ரெம்பர் 23 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கண்காணிப்புக் குழுத் தலைவர் டெனிபோர், "இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் மிக அமைதியானதும், நம்பகத்தன்மை வாய்ந்ததுமான முறையில் நடைபெற்று முடிந்திருக்கிறது.

பெரும்பாலான வாக்காளர்களுக்கு விருப்பு வாக்களிப்பு செயன்முறை மற்றும் அதன் அவசியம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை.

எதிர்வருங் காலங்களில் அவ்விழிப்புணர்வை                          ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்" என்று வலியுறுத்தியிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையின் ஒன்பதாவது  ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் 114 பக்கங்களைக் கொண்ட இறுதி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

"ஜனாதிபதித் தேர்தலுக்கான    பின்னணியையும், சூழலையும் நிர்ணயிப்பதில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற அரகலய' என அறியப்படும் மக்கள் எழுச்சிப் போராட்டம் மிகமுக்கிய வகிபாகத்தைக் கொண்டிருந்தது.

அப்போராட்டத்தின் விளைவாக அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய பதவி கவிழ்க்கப்பட்டு, அவரது பதவிக் காலத்தைப் பூர்த்தி செய்வதற்கான ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார்.

அதன்படி நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க உள்ளடங்கலாக 39 ஆண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இத்தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறத்தவறியதை அடுத்து, இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு, அதனடிப்படையில் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டார்.

இத் தேர்தலானது நம்பகமானதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான முறையில் நடாத்தப்பட்டதுடன், வாக்களிப்பு நிலையங்களுக்கு பெரும் எண்ணிக்கையில் திரண்டுவந்து வாக்களித்தமைக்காக மக்களையும் பாராட்ட வேண்டும்" என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று தேர்தல் காலப்    பகுதியில் அரச வளங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் தமது இறுதி அறிக்கையில் கரிசனையை  பொது நலவாய கண்காணிப்புக் குழு, வெளிப்படுத்தியுள்ளது.

தேர்தல் பிரசாரங்களுக்கு செலவிடப்படும் நிதி குறித்த கண்காணிப்பு செயன்முறையை மேலும் செயற்திறன் மிக்கதாக மாற்றியமைப்பதும், ஊடகங்களுக்கான ஒழுக்கநெறிக் கோவையை வலுப்படுத்துவதும் அவசியம் என வலியுறுத்தியுள்ளது.

அதேவேளை இலங்கையின் தேர்தல் செயன்முறையை மேலும் வலுப்படுத்துவதை முன்னிறுத்தி மேற்கொள்ளப் படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகள் இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வெளியகத்தரப்பினரால் வழங்கப்படும் நன்கொடைகள்      மற்றும் தனியார் நிதியளிப்பு என்பவற்றுக்கான மட்டுப்பாடொன்றை விதித்தல்,

ஊடக விளம்பரங்களுக்காக செலவிடப்படும் நிதியை மட்டுப்படுத்துவதுடன், இவ்விடயத்தில் ஊடகங்களுக்கான வரையறைகளை நிர்ணயித்தல்,

தேர்தல் சார்ந்த குற்றங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கல்

ஆகியவற்றுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு எதிர்கால மோதல்களைத் தவிர்க்கும் வகையில் சிறுபான்மையின மக்களின் கருத்துக்கள் அர்த்தமுள்ள விதத்தில் உள்வாங்கப்படுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக சமாதான மற்றும் நல்லிணக்க முயற்சிகளை இலங்கை அரசாங்கம் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக்குழு அதன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. 

அண்மைய பதிவுகள்