வடமாகாணத்தில் கடந்த சில நாள்களாகப் பரவிவரும் மர்மக் காய்ச்சல் காரணமாக, நேற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

4 months ago



வடமாகாணத்தில் கடந்த சில நாள்களாகப் பரவிவரும் மர்மக் காய்ச்சல் காரணமாக, நேற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதனால் நாளுக்கு நாள் நிலைமை ஆபத்தானதாக மாறி வருகின்றது என்று சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

வரணியைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவர். மூன்று நாள்கள் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மந்திகை மருத்துவமனையில் இருந்து யாழ்ப்பாணம் போதனா. மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

அவருக்கு ஏற்பட்டிருந்த நோய் நிலைமை சடுதியாகத் தீவிரமடைந்தே உயிரிழந்தார் என்று தெரியவருகின்றது.

இறப்புக்கான காரணங்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில், மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இவரின் சுவாசத் தொகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு உண்ணிக் காய்ச்சல் அல்லது எலிக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவருகின்றது.

எனினும், எவ்வாறான நோயால் அவர் உயிரிழந்தார் என்பது கொழும்பில் இருந்து பரிசோதனை அறிக்கைகள் கிடைத்த பின்னரே உறுதிப்படுத்த முடியும் என்று சுகாதாரத்துறையினர் கூறியுள்ளனர்.

இதேவேளை, மேற்படி திடீர்க்      காய்ச்சல் மற்றும் சடுதியான நோய் நிலை காரணமாக இன்னொருவரும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில்            சேர்க்கப்பட்டுள்ளார்.

அண்மையில் பெய்த கனமழை      காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பேரிடரால், எலிக் காய்ச்சல் பரவக்கூடிய சாத்தியங்கள் உள்ளன.

எனவே, பொதுமக்கள் தமது சுகாதாரம், குடிதண்ணீர் ஆரோக்கியம் என்பவற்றில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். என்று யாழ்ப்பாணம் போதனா  மருத்துவமனையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி நேற்றுமுன்தினம் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.