இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்யக் கோரி போராட்டம்.

5 months ago


இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க அனுமதி பெற்று தர நடவடிக்கை எடுக்க கோரியும் 5 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் ராமேஸ்வரம் பஸ் நிலையம் எதிரே இன்று வெள்ளிக்கிழமை (19) காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 74 மீனவர்களையும் 8 விசை படகுகளையும் 4 நாட்டுப் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் தர கோரியும், முன்னதாக இலங்கை சிறையில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 06 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு தற்போது வரை இலங்கை கடற்படை வசம் உள்ள தமிழகத்தை சேர்ந்த 170 இற்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டு படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

கச்சத்தீவு பகுதியில் இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினை இன்றி மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இதன்போது முன்வைக்கப்பட்டது.

வலியுறுத்தி ராமநாதபுரம். தூ த்துக்குடி. புதுக்கோட்டை, நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி, நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இராமேஸ்வரத்தில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முதல் கட்டம் எனவும், தொடர்ந்து இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டால் தமிழகம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என்றும், இலங்கை சிறையில் நோய்வாய்ப்பட்டு இருக்கக்கூடிய இராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருக்கு உரிய சிகிச்சை அளித்து விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.