தமிழ்நாடு திருச்சி சிறைச்சாலையின் சிறப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் சிறையிலிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
தமிழ்நாடு திருச்சி சிறைச்சாலையின் சிறப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் நேற்று முன்தினம் (14) சிறையிலிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
இவ்வாறு தப்பிச்சென்றவர் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், நைஜீரிய கைதி ஒருவருடன் சிறையிலிருந்து தப்பிச்சென்ற போது பொலிஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டின் மண்டபம் துறைமுகத்தில் இருந்து மன்னார் பகுதிக்கு படகு மூலம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு செல்ல முற்பட்ட போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
சந்தேக நபருக்கு எதிராக நடத்தப்பட்ட வழக்கு விசாரணையில், அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதோடு, கடுமையான குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள சிறப்புப் பிரிவில் வைத்து, பலத்த பாதுகாப்பு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது திருச்சி சிறையில் உள்ள சிறப்புப் பிரிவில் இலங்கை குற்றவாளிகள் 86 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் வடக்கில் இருந்து இந்தியாவுக்குச் சென்று அங்கிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.