12 விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த பருத்தித் துறை நகர சபையின் முன்னாள் தவிசாளர் வேலுப்பிள்ளை நவ ரத்தினராசா சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இது குறித்து மேலும் அறிய வருபவை வருமாறு, முன்னாள் தவிசாளர், கடந்த மாதம் 29ஆம் திகதி முல்லைத்தீவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். புளியம்பொக்கணையில் அமைக்கப் பட்டிருந்த வீதித் தடையில் அவரின் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.
இதில், படுகாயமடைந்த அவர் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கடந்த வாரம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை அதிகாலை அவர் உயிரிழந்தார். இவர், கடந்த 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் பருத்தித்துறை நகர சபைக்கு தெரிவாகியிருந்தார்.
உள்ளூராட்சியின் பதவிக்காலம் முடிவடைய முன்னதாக சில மாதங்கள் பருத்தித்துறை நகர சபையின் தவிசாளராகவும் அவர் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.