அம்பாறையில் ஏற்பட்ட வெள்ளத்தால் நீர்க் குழாய் உடைந்து ஒரு வாரமாக காரைதீவுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பிரதான பாரிய நீர்க் குழாய் உடைத்தெறியப்பட்ட காரணத்தால் கடந்த ஏழு நாள்களாக காரைதீவுக் கிராமத்துக்குக் குழாய் நீர் விநியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளது.
தண்ணீரில் மிதந்த காரைதீவுக்கு தண்ணீர் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
தற்காலிகமாக மாவடி பள்ளியில் இணைப்பில் இருந்து குடிதண்ணீர் விநியோகத்தை வழங்குவதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சாய்ந்த மருது பொறுப்பதிகாரி கஜனி முருகேசு தலைமையில் அக்கரைப்பற்று பிராந்திய பொறியியல் பிரிவுப் பொறியியலாளர் தாமோதரம் வினாயகமூர்த்தி, இயக்கமும் பராமரிப்பும் பிரிவுக்கான பொறியியலாளர் பாக்கியராஜா மயூரதன் மற்றும் காரைதீவு பிரதேச அலுவலகப் பொறுப்பதிகாரி பொறியியலாளர் விஜயரெத்தினம் விஜயசாந்தன் ஆகியோர் காரைதீவு லவன் தலைமையிலான இராவணா இளைஞர்களின் உதவியுடன் இரவு பகலாக முயற்சி செய்த போதிலும் போதிய பலனளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒரு வாரமாகக் காரைதீவு பெரும்பாக பகுதிக்கு குடி தண்ணீர் விநியோகம் முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது.
இதனால் பொது மக்கள் பலத்தை அசௌகரியத்துக்குள்ளாகி வருகிறார்கள்.
அவ்வேளையில் சித்தானைக்குட்டி ஆலயம் பிரதேச சபை சில தனியார் மற்றும் இராவனா அமைப்பினர் வவுசர் மூலம் வீதி வீதியாகக் குடி தண்ணீர் வழங்கி வருகின்றனர்.
எனினும் பிரதான நீர் விநியோகம் சீர் செய்யும் வேலைகள் இன்னும் நிறைவடையவில்லை.
பிரதான குடி தண்ணீர் விநியோகம் கிடைக்க மேலும் இரண்டு அல்லது மூன்று நாள்களாவது செல்லும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிந்தவூர் சாய்ந்தமருதைப் பொறுத்த வரை அருகில் இருந்து குடி தணணீர் பெறப்படுவதால் பாரிய தட்டுப்பாடு இல்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் காரைதீவுக்கு ஒரு வழியிலும் நீர் விநியோகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.