பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசிடம் முன்னேற்றம் எதுவுமில்லை -- பிரிட்டனின் இந்தோ பசுபிக் பிராந்திய அமைச்சர் கத்தரின் வெஸ்ட் தெரிவிப்பு

2 months ago



பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்திடம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை.

இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்துடன் பேணப்படும் அணுகுமுறையை எமது அரசாங்கம் மீளாய்வுக்கு உட்படுத்தவுள்ளது.

இவ்வாறு பிரிட்டனின் இந்தோ பசுபிக் பிராந்தியங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் கத்தரின் வெஸ்ட் தெரிவித்துள்ளார்.

இருநாள் பயணமாக கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கு வந்திருந்த கத்தரின் வெஸ்ட், நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொண்டார்.

யாழ்ப்பாணத்தில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தும்போதே, பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை மீதான அதிருப்தியை முன்வைத்துள்ளார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத் தம், சமஷ்டி முறைமை உள்ளடங்கலாகத் தமிழர்களுக்கான அரசியற்தீர்வு மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான விடயங்களில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு, தற்போது அடையப்பட்டிருக்கும் முன்னேற்றம் தொடர்பாக அறிந்துகொள்ள விரும்புகின்றேன்.

அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் இதுதொடர்பில் கலந்துரையாடியபோதும், அவர்கள் ஓரிரு வார்த்தைகளிலேயே பதிலளிக்கின்றனர் என்றும் இந்தக் கலந்துரையாடலில் கத்தரின் வெஸ்ட் குறிப்பிட்டுள்ளார்.

கத்தரின் வெஸ்ட்டுக்குப் பதிலளித்த தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள், தற்போதைய அரசாங்கம் தமிழர்களுக்கு இனப்பிரச்சினை இல்லை என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது.

பொறுப்புக்கூறல் விடயத்தில் எவரையும் நீதிமன்றத்தில் நிறுத்தப் போவதில்லை என்பதும் இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கின்றது.

இந்த அரசாங்கம் தமிழர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொருத்தமான தீர்வை வழங்கும் என்ற நம்பிக்கை இல்லை.

கடந்தகால அரசாங்கங்கள் அரசியற் தீர்வு தொடர்பாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் குறைந்தபட்சம் பேச்சுக்களை நடத்துவதற்கான நடவடிக்கைகளையேனும் எடுத்திருந்தன.

ஆனால் தற்போதைய அரசாங்கம் அரசியற் தீர்வு தொடர்பாகத் தனது தேர்தல் அறிக்கையிலும் எதையும் கூறவில்லை.

நடைமுறையிலும் எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்க வில்லை என்று சுட்டிக்காட்டினர்.

பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அப்பால் இலங்கை அரசாங்கத் தரப்பிலிருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் எட்டப்படவில்லை என்பதை கத்தரின் வெஸ்ட் ஏற்றுக்கொண்டார்.

இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்துடன் பேணப்பட்டுவரும் அணுகுமுறையை தமது அரசாங்கம் மீளாய்வுக்கு உட்படுத்தவுள்ளது என்றும், இதுவிடயத்தில் வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.