யாழ்.மானிப்பாயில் உலக இயன்மருத்துவ தினத்தை முன்னிட்டு நடைபவனி நிகழ்வு இன்று இடம்பெற்றது.
உலக இயன்மருத்துவ தினத்தை முன்னிட்டு நடைபவனி நிகழ்வு ஒன்று இன்று காலை 6.30 மணியளவில் சித்தங்கேணி சந்தியிலிருந்து மானிப்பாய் கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலை வளாகம் (GMH) வரை முன்னெடுத்துச் செல்லப்பட்டது.
மானிப்பாய் நரம்பியல் புனர்வாழ்வு சிகிச்சை நிலையம் (Neuro Rehabilitation centre) மற்றும் தனியார் தாதியர் பாடசாலை(Institute Of Medical science) ஏற்பாட்டில் இந்த நடைபவனி இடம்பெற்றது.
இந் நிகழ்வில் நிறுவனத்தின் தலைவரான- பேராசிரியர் ராஜேந்திரா சுரேந்திரகுமரன், வைத்தியர்- பேதுருப்பிள்ளை அமல் தினேஷ் கூஞ்ஞே, சங்கானை பிரதேச செயலாளரான - திருமதி கவிதா உருத்திரகுமார் சிறப்புவிருந்தினராக கலந்து சிறப்பித்தார்கள்.
மேலும் சங்கானை இளைஞர் மன்ற உறுப்பினர்கள், சங்கானை பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும் கிரீன் ஞாபகார்த்த வைத்தியசாலை (GMH) ஊழியர்கள், தனியார் தாதியர் பாடசாலையின் நிறுவன ஊழியர்கள் ( IMS) மற்றும் மாணவர்களும் இந் நடை பவனியில் கலந்து கொண்டார்கள்.
இந் நிகழ்வானது இயன்மருத்துவத்தின் முக்கியத்துவத்தையும் இயன்மருத்துவம் பற்றிய விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்டது.
இம்முறை “முதுகு வலி மற்றும் அதற்கான இயன்மருத்துவ சிகிச்சை முறைகள்” எனும் கருப்பொருளில் உலக இயன்மருத்துவதினம் வருகின்ற 8ம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ளது.
மானிப்பாய் நரம்பியல் புனர்வாழ்வு சிகிச்சை நிலையமானது 2014 ம் ஆண்டு முதல் 2024 ம் ஆண்டு வரை சுமார் 10 வருட காலங்களாக சிறந்த முறையில் இயன்மருத்துவ மற்றும் புனர்வாழ்வு சிகிச்சைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.