யாழில் 350 பவுணுக்கும் மேற்பட்ட நகைகள் திருடப்பட்ட வழக்கில், 2 வது சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
யாழ்.கோப்பாய், கோண்டாவில், மானிப்பாய் ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு வருடங்களாக 350 பவுணுக்கும் மேற்பட்ட நகைகள் திருடப்பட்ட வழக்கில், இரண்டாவது சந்தேகநபர் (பிரதான சந்தேகநபரின் மனைவி) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து இந்தியாவுக்குச் சென்று, பின்னர் அங்கிருந்து வெளிநாடு ஒன்றுக்குத் தப்பிச் செல்ல முற்பட்ட நிலையிலேயே, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடையின் அடிப்படையில் விமான நிலையப் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் இந்திக தலைமையிலான குழுவினரிடம் பாரப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், சந்தேகநபரிடம் இருந்து 40 பவுண் நகைகள் மற்றும் மூன்றரை லட்சம் ரூபா பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரிடம் இருந்து திருடப்பட்ட நகைகளைப் பெற்றுக்கொண்ட இருவரும் கைதுசெய்யப்பட்டு அவர்களும் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களின் பிள்ளைகள் (பிரதான சந்தேகநபர் மற்றும் இரண்டாவது சந்தேகநபரான அவருடைய மனைவியின் பிள்ளைகள்) சிறுவர் காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளனர்.