அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த துஷ்பிரயோகத்தைக் கண்டித்தும், நீதி கேட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் கைது
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த துஷ்பிரயோக சம்பவத்தைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் கோட்டூர், மண்டபம் சாலைப் பகுதியைச் சேர்ந்த பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் (வயது 37) கைது செய்யப்பட்டுள்ளார்.
பிணையில் வெளியே வர முடியாதபடி அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
இந்நிலையில் இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழக எதிர்க்கட்சிகள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி, தி.மு.க. அரசைக் கண்டித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்து போராட்டம் நடத்தினார்.
அதேபோல், நேற்று அ.தி. மு.கவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு. கவினர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்த அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வன்கொடுமை வழக்கில் அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அ.தி.மு.கவின் போராட்டம் தொடரும்.
இந்த வழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த 'சார்' யார்?" என்று கேள்வி எழுப்பினார்.
அதேபோல், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பருவமழை புயல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு மாநில அரசு கோரும் நிவாரணத் தொகையை முழுமையாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்பன உட்பட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆளுநரிடம், த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் மனு வழங்கினார்.
அண்ணா பல்கலை சம்பவத்துக்கு கண்டன அறிக்கை வெளியிட்டதோடு விஜய் நேற்று தன்கைப்பட ஒரு கடிதமும் எழுதியிருந்தார்.
அதில் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு அண்ணனாக, அரணாக இருப்பேன் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியினர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த துஷ்பிரயோக சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
வள்ளுவர் கோட்டம் பகுதியில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நுங்கம்பாக்கம் பொலிஸார் அனுமதி மறுத்திருந்தனர்.
இந்நிலையில், தடையை மீறி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார்.
அப்போது, "ஜனநாயக ரீதியில் போராட வந்த தன்னை பொலிஸ் ஒடுக்குகிறது" என்று சீமான் குற்றஞ்சாட்டினார்.