இலங்கையில் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் தற்போது உள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

2 weeks ago



இலங்கையில் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் தற்போது உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தெரிவித்தார்.

நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்டிருக்கும், புதிய குழுவின் ஊடாக அரசியல் செல்வாக்கைப் பொருள்படுத்தாமல், அவை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாரஹேன்பிட்டியில் உள்ள "நில மெதுர” கட்டடத்தில் அமைந்துள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க உரையாற்றினார்

அரச நிறுவனமொன்றில் நியாயமான சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்களுக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை என்றும், அரசு என்ற வகையில் முழுக் கட்டமைப்பும் சரிவைக் கண்டுள்ளதெனவும் தெரிவித்தார்.

சரிவடைந்திருக்கும், கட்டமைப்பை மீள உருவாக்க நாம் தயாரா? இல்லையா? என்பது குறித்து எம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க வலியுறுத்தினார்.

மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளுக்கு அரசியல் அதிகாரம் மட்டுமல்ல, அரச சேவையும் பொறுப்புக் கூற வேண்டும் என்பதையும் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க குறிப்பிட்டார்.

அரச சேவையில் இருக்கின்ற கதிரை தொடர்பான பிரச்சினை தமக்கு இல்லை எனவும், கதிரையில் அமர வைப்பதற்கு யார் இருக்கின்றார்கள் என்ற பிரச்சினையே தமக்கு இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்வதற்கான புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் செல்வாக்குகளைப் பொருட்படுத்தாமல் அவை தொடர்பிலான தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

அரச சேவையை மட்டுப்படுத்தும் எதிர்பார்ப்பு தனக்கு இல்லை எனவும், ஆனால் அரச சேவையை நடத்திச் செல்வதற்கான செலவில் பிரச்சினைகள் இருப்பதால், அரச சேவையை ஒரே நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்து முறையான நெறிமுறைக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்தப் பணிகளை நடைமுறைப்படுத்த அரசியல் அதிகார அடிப்படையில் தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதாகவும், அரச அதிகாரிகளின் பங்களிப்பே இந்தப் பணிகளின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.