ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் 2024 தமிழ் மக்கள் பொதுச் சபையின் அறிக்கை.

3 months ago


ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் 2024 தமிழ் மக்கள் பொதுச் சபையின் அறிக்கை

22.09.2024.

தமது விடுதலைக்காகத் தொடர்ச்சியாகப் போராடிவரும், அரசற்ற மக்கள் கூட்டமாகிய ஈழத்தமிழர்கள் சிறீலங்கா அரசு ஒழுங்குபடுத்தும் ஒரு தேர்தலில், தமது ஆள்புல எல்லைக்குள் எப்படித் தம்முடைய கூட்டு விருப்பை வெளிப்படுத்தலாம் என்பதற்கு ஆசியாவின் ஆகப்பிந்திய உதாரணம்தான் தமிழ் பொது வேட்பாளர் ஆகும்.

அரசாங்கம் அறிவித்த ஒரு தேர்தல் களத்தை எப்படி ஓர் அரசற்ற மக்களாகிய தமிழ் மக்கள் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும் தங்களுடைய அபிலாசைகளை ஒருமித்த குரலில் சொல்வதற்கும் பயன்படுத்தலாம் என்று சிந்தித்துக் களம் இறக்கப்பட்டவர் தான் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் ஆகும்.

தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது என்ற கோஷத்தோடு களமிறக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளர் கிழக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்டார்.

அவர் சட்ட ரீதியாகப் பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கை உணர்வுபூர்வமாக இணைக்கும் ஒரு குறியீடாக எழுச்சி பெற்றுள்ளார்.

வடக்கில் அவருக்கு கிடைத்த வாக்குகள் தாயக ஒருமைப்பாட்டை பலப்படுத்த விரும்புபவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவை.

தமிழ்ப் பொது வேட்பாளர் வடக்கையும் கிழக்கையும் இணைப்பது மட்டுமல்ல; தமிழர் தாயகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒருங்கிணைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு களம் இறக்கப்பட்டார்.

அதே சமயம் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியிலும் பொது வேட்பாளர் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கின்றார்.

கடந்த 15 ஆண்டுகளிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் ஒப்பீட்டளவில் ஏதோ ஓர் ஒருங்கிணைவு ஏற்பட்டிருக்கிறது.

தாயகத்தில் தமது உறவுகளின் ஊடாக பொது வேட்பாளரை பலப்படுத்துவதில் அவர்கள் அதிகம் பங்களித்துள்ளார்கள்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் பல வழிகளிலும் உதவிகளைப் புரிந்திருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பலப்படுத்தும் ஒரு தேர்தல் களம் என்ற அடிப்படையில் பிரச்சார நடவடிக்கைகளில் ஒருவித தன்னதிகாரம் அனுமதிக்கப்பட்டது. தன்னியல்பான.

தன்னெழுச்சியான செயற்பாடுகள் தடுக்கப்படவில்லை. அதனால் புலம்பெயர்ந்த தமிழர்கள்

மத்தியில் இருந்தும் தாயகத்திலும் தமிழ் மக்கள் அவரவர் கொள்ளளவுக்கு ஏற்பவும்;

அவரவர் சக்திக்கு ஏற்பவும்; விருப்பத்திற்கு ஏற்பவும்; அவரவர் அரசியல் புரிதல்களுக்கு ஏற்பவும் பிரச்சார நடவடிக்கைகளில் பங்களித்திருக்கிறார்கள். ஒரு மையத்திலிருந்து கட்டுப்படுத்தப்படாத

இப்போக்கு காரணமாக ஏற்பட்டிருக்கக் கூடிய சில குழப்பமான தோற்றப்பாடுகளை தமிழ் மக்கள் பொதுச்சபை விளங்கிக் கொள்கின்றது. எனினும் மக்கள் தன்னார்வமாக பிரச்சாரநடவடிக்கைகளை முன்னெடுத்தமை நமக்கு உற்சாகமூட்டுவதாக அமைந்தது.

தமிழ் மக்கள் பொதுச்சபை என்பது தமிழ் அரசியலில் நிர்ணயகரமான ஒரு தாக்கத்தைச் செலுத்தும் மக்கள் அமைப்பாகக் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்ற நீண்ட கால இலக்கோடு தொடங்கப்பட்ட ஒரு மக்கள் அமைப்பாகும்.

தேசத்தை கட்டியெழுப்பும் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே ஒரு பொது வேட்பாளர் தேர்தலில் இறக்கப்பட்டார்.

ஒரு மக்கள் அமைப்பும் கட்சிகளும் இணைந்து தேர்தலில் ஒரு வேட்பாளரை நிறுத்தியமை என்பது தமிழ் அரசியலில் ஒரு புதிய போக்கு. ஒரு புதிய பண்பாடு.

இந்தப் பண்பாட்டை தொடர்ந்தும் பலப்படுத்தி வளர்ப்பதற்கு தேர்தல் முடிவுகளுக்கும் அப்பால் அர்ப்பணிப்பும் தெளிவான தூர இலக்கும் இருக்க வேண்டும் என்று நம்புகின்றோம்.

தேசத்தை கட்டியெழுப்பும் பணிகள் தேர்தல் வெற்றிகளில் மட்டும் தங்கியிருக்கவில்லை என்பதனை தமிழ்மக்கள் பொதுச்சபை நன்கு விளங்கி வைத்திருக்கின்றது.

தேர்தல் நடவடிக்கைகள் தேசத்தை கட்டி எழுப்பும் நடவடிக்கைகளில் ஒரு பகுதி மட்டுமே. அதற்கு அப்பால் தேசத்தை கட்டியெழுப்புவது என்பது அதைவிட ஆழமான பொருளில், பரந்தகன்ற தளத்தில், நீண்ட கால அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒரு தொடர்ச்சியான அரசியல் முன்னெடுப்பு என்பதனை நாம் நான்கு விளங்கி வைத்திருக்கின்றோம்.

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கு கிடைத்த ஆதரவு அந்தப் பணியில் நம்மை தொடர்ந்து முன்னோக்கிச் செலுத்தும் ஊக்க சக்தியாக அமையும் என்று நம்புகின்றோம். இந்த விடயத்தில் தேர்தல் நடவடிக்கைகளில் நமக்கு உதவி புரிந்த நமது மக்கள் அமைப்பின் உறுப்புக்களாக உள்ள அமைப்புகளுக்கும், தனிநபர்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது கட்டமைப்புக்கு வெளியிலிருந்து எமக்குத் தன்னார்வமாக உதவி புரிந்த தனி நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் நன்றி.

தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் நன்றி.

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்காத போதிலும் கட்சி கடந்து பரப்புரைகளில் ஈடுபட்ட தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும், உறுப்பினர்களுக்கும். ஆதரவாளர்களுக்கும் நன்றி.

புலம்பெயர்ந்த பரப்பில் இருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் நமக்கு பல்வேறு வழிவகைகளிலும் உதவி புரிந்த உற்சாகமூட்டிய அனைத்துத் தரப்புகளுக்கும் நன்றி.

மிகக்குறுகிய காலத்துக்குள் எமது அரசியல் செய்தியை உலகமெல்லாம் பரப்பிய ஊடகவியலாளர்களுக்கு நன்றி.

புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் அனுரகுமார திசநாயக்கவுக்கு எமது வாழ்த்துகள்.

தமிழ் மக்களின் இறைமையையும் சுய நிர்ணய உரிமையையும் அங்கீகரித்தால். தான் இலங்கைத் தீவின் பல்லினச் சூழலைப் பாதுகாக்கலாம் என்பதனை புதிய ஜனாதிபதிக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

தமிழ் மக்கள் பொதுச் சபையாகிய நாம், தேசத்தைக் கட்டி எழுப்பும் உன்னதமான ஒரு வழியில் முதலாவது படியை கடந்திருக்கின்றோம்.

தமிழ்ப் பொது வேட்பாளரால் ஒன்று திரட்டப்பட்ட கூட்டுணர்வையும், நம்பிக்கையும், தமிழ்த் தேசிய ஐக்கியத்தையும் தொடர்ந்து பலப்படுத்துவோம்.

பாதுகாப்போம்.