இலங்கை மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும். வரிசையுகம் உருவாகும்.-- ராஜித சேனாரத்ன தெரிவிப்பு

2 months ago



பணம் அச்சிடப்படுவதால் மீண்டும் பண வீக்கம் அதிகரித்து பொருட்களின் விலைகளும் அதி கரிக்கவுள்ளன.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும். வரிசையுகம் உருவாகும்.

இதனை முன்னரே அறிந்ததால் தான் ஒன்றரை ஆண்டுகளில்        முடியாவிட்டால் விட்டுச் செல்வதாக அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

வங்குரோத்தடைந்த நாடொன்று மிகக் குறுகிய காலத்தில் அந்த நிலைமையிலிருந்து மீண்டிருக்கின்றது என்றால் அது இலங்கை மாத்திரமே.

அதற்குரிய பெருமை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது அரசாங்கத்தையே சேரும்.

எவ்வாறிருப்பினும் அதனை மக்கள் மறந்துவிட்டனர்.

தற்போது யார் வேண்டுமானாலும் நாட்டை நிர்வகித்துச் செல்லலாம் என்று மக்கள் எண்ணுகின்றனர்.

ஆனால் அது தவறாகும். இதனை நாம் தேர்தலுக்கு முன்னரே கூறினோம். எனினும் 42 சதவீத மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால் தற்போது ரணில் விக்கிரம சிங்கவின் வேலைத்திட்டத்தை அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஏற்றுக் கொண்டிருக்கின்றார்.

செப்ரெம்பர் 19ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் கையெழுத்திடப்பட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் அவ்வாறே கையெழுத்திடப்படுகிறது.-என்றார்.