அமரர் சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்தை எதிர்வரும் 17ஆம் திகதி அரசிடம் ஒப்படைக்க நடவடிக்கை
அமரர் சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்தை எதிர்வரும் 17ஆம் திகதி அரசிடம் ஒப்படைக்க நடவடிக்கை
மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான ஆர்.சம்பந்தன் பயன்படுத்திய எதிர்க்கட்சித் தலைவரின் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தை எதிர்வரும் 17ஆம் திகதி அரசாங்கத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தனின் மகள் நீதி, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே, இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் இறப்பதற்கு முன்னர் பயன்படுத்திய எதிர்க்கட்சித் தலைவரின் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தை எதிர்வரும் 17ஆம் திகதி அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளோம் என, அவரது மகள் குறிப்பிட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்த பின்னரும், இந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் தொடர்ந்தும் வாழும் வாய்ப்பு சம்பந்தனுக்கு கிடைத்தது.
அது நல்லாட்சி அரசாங்கத்தின் போது அப்போதைய காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டது.
சம்பந்தன் கடந்த ஜூலை 1ஆம் தேதி காலமானார். அவர் காலமாகி மூன்று மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் இன்னும் அவரது குடும்ப உறுப்பினர்களிடமே உள்ளது.
2015ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றதன் பின்னர் இரா.சம்பந்தனுக்கு இந்த உத்தியோகபூர்வ இல்லம் கிடைத்தது.
இதற்கிடையில், இந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை சம்பந்தன் தொடர்ந்து பயன்படுத்த அனுமதித்த அமைச்சரவைப் பத்திரத்தை மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் தண்ணீர்க் கட்டணம், மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், பராமரிப்புச் செலவுகள் என்பன அரசாங்கமே செலுத்துவதுடன், வீட்டைப் பராமரிக்கும் தொழிலாளர்களின் சம்பளமும் அரசாங்கமே செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது்.