சவுதிக்கு வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்று வாகன விபத்தில் காயமடைந்த பெண் இன்று இலங்கை திரும்பினார்.

2 months ago



சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப் பெண்ணாக சென்று வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த பெண் சிகிச்சை பெற்று இன்று வெள்ளிக்கிழமை (18) காலை இலங்கை திரும்பியுள்ளார்.

இந்த பெண் பெலியத்த, கெடமான்ன பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாவார்.

இவர் சார்ஜாவில் இருந்து இன்றைய தினம் காலை 04.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இந்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

"நான் பெலியத்த, கெடமான்ன பிரதேசத்தில் வசிக்கிறேன். எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். எங்களுக்கு கதவுடன் கூடிய வசதியான வீடு இல்லை.

இதன் காரணமாக, நான் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி அன்று கொழும்பு மருதானைப் பகுதியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உதவியுடன் சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப் பெண்ணாக சென்றேன்.

நான் சவுதி அரேபியாவை சென்றடைந்த போது என்னை அழைத்து செல்ல விமான நிலையத்திற்கு வாகனம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த வாகனத்தில் சிறிது தூரம் பயணித்துக் கொண்டிருந்த போது வாகனம் விபத்துக்குள்ளானது.

விபத்தில் நான் படுகாயமடைந்து சவுதி அரேபியாவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டேன்.

வைத்தியசாலையில் இருந்த வைத்தியர்கள், இந்த உடல் நிலைமையில் உங்களால் வேலை செய்ய முடியாது. அதனால் நீங்கள் மீண்டும் இலங்கைக்கு செல்ல வேண்டி வரும் என என்னிடம் கூறினர்.

என்னை இலங்கைக்கு அழைத்து வர கொழும்பு, மருதானை பகுதியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் என்னிடம் ஐந்து இலட்சம் ரூபாவைக் கேட்டது.

பின்னர், இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் கலாநிதி சரத் ஜயந்த பீரிஸ் மற்றும் பல அதிகாரிகள் இணைந்து என்னை இலங்கைக்கு அழைத்து வர உதவி செய்தனர்." என தெரிவித்தார்.