பிரித்தானியாவில் சவுத்போர்ட் தாக்குதல்தாரி தொடர்பில் பதிவை வெளியிட்டு கலவரத்தை ஏற்படுத்திய பெண் கைது.

5 months ago


பிரித்தானியாவில் சவுத்போர்ட் தாக்குதல்தாரி தொடர்பில் தவறான பதிவை முதலில் வெளியிட்டு, நாடு முழுவதும் கலவரம் வெடிக்க காரணமான பெண் கைதாகியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பதிவில் தாக்குதல்தாரி ஒரு புகலிடக் கோரிக்கையாளர் என்றும், சிறுபடகு மூலமாக கடந்த ஆண்டு பிரித்தானியாவில் நுழைந்தவர் என்றும், MI6 கண்காணிப்பு பட்டியலிலும் அவர் இடம்பெற்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செஸ்டர் (Chester) பகுதி அருகாமையில் வைத்து அவர் கைதாகியுள்ளதோடு, தற்போது அவர் பொலிஸ் காவலில் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பிரித்தானியாவின் முக்கியமான பகுதிகளில் கலவரம் வெடித்ததுடன், பொது சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டது.

இணையத்தில் பரவிய தவறான தகவல்கள் காரணமாகவே பெரும்பாலான நகரங்களில் கலவரம் வெடித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் தாரியின் பெயர் உட்பட எந்த தகவல்களையும் விசாரணை அதிகாரிகள் வெளியிடும் முன்னர், சந்தேக நபரின் பெயர் Ali Al-Shakati என அவர் தமது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், இவை அனைத்தும் உண்மை என்றால் பிரித்தானியா பற்றியெரிவது உறுதி என்றும் அந்த பெண் தமது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் தம்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அவர் , சுமார் 38 நிமிடங்கள் முன்னர் அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் இருந்து ஒருவர் பதிவிட்ட தகவல்களை மட்டுமே தாம் நகலெடுத்து பதிவிட்டுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கானோர் இதே தகவலை அப்போது பதிவிட்டிருந்தாலும், அவை உடனடியாக நீக்கப்பட்டிருந்தாலும், இவர் பகிர்ந்த தகவலானது ரஷ்ய சமூக ஊடக பயனர்களால் தீயாக இணையத்தில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தீவிர வலதுசாரி ஆதரவாளர்களான Tommy Robinson மற்றும் Andrew Tate ஆகியோரும் தங்கள் சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்தனர். இதனால் தீவிர வலதுசாரிகளால் பிரித்தானியா முழுவதும் கலவரம் வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்