வவுனியாவில் பிடியாணை பிறப்பித்த நபரை இன்று (09) பொலிஸார் கைது செய்த நிலையில் அந்தப் பகுதியில் பதற்றம்
வவுனியாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்த நிலையில் அந்த பகுதியில் பதற்றமான நிலைமை, திங்கட்கிழமை (09) மாலை ஏற்பட்டிருந்தது.
வவுனியா நீதிமன்றிற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் அங்கு நிற்பதை அவதானித்த வவுனியா பொலிஸார் அவரை மடக்கிப் பிடித்தனர்.
இதன்போது அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.
எனினும், கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதேவேளை கைது நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டபோது அந்தப் பகுதியில் அலைபேசியில் ஒளிப்படம் எடுத்து, குழப்பம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில், மேலும் இரண்டு பேரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை, விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.