பெறுமதி சேர் வரி என்ற வெட் வரி 20 வீதம் வசூலிக்க முடியாத அபாயம்

5 months ago


பெறுமதி சேர் வரி என்ற வெட் வரியுடன் தொடர்பான வருவாயில் சுமார் 20% வசூலிக்க முடியாத அபாயத்தில் உள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வினைத்திறனற்ற மற்றும் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கத்திற்கு வசூலிக்கப்பட வேண்டிய ஆனால் இதுவரை அறவிடப்படாத வெட் வரி தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கையை வெளியிடும் போதே தேசிய கணக்காய்வு அலுவலகம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் பராமரிக்கப்படும் ஆவணங்களின்படி, டிசம்பர் 31, 2022 நிலவரப்படி, வெட் வரி நிலுவைத் தொகை மற்றும் அந்த நிலுவைகளுக்கு விதிக்கப்பட்ட அபராதங்களின் மதிப்பு 369 பில்லியன் ரூபாயாகும், இதில் 255 பில்லியன் ரூபாய் நிலுவைத் தொகை பல்வேறு காரணங்களுக்காக வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டுகிறது.

மீளப்பெறக்கூடியதாக இனங்காணப்பட்டுள்ள 114 பில்லியன் ரூபா வரி நிலுவைத் தொகை 13 வருட காலத்திற்கு நிலுவையில் உள்ளதாகவும் கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.

இதன்படி உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அறவிடப்பட வேண்டிய வெட் வரி உரிய காலத்தில் வசூலிக்கப்படாததால் பொதுமக்கள் ஏற்கனவே தியாகம் செய்து அரசாங்கத்திற்கு வருமானமாக செலுத்திய வரியில் பெருமளவிலான வருமானம் தவறாகப் பயன்படுத்தப்படுத்தல் அல்லது அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. 

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தனது கடமைகளை உரிய நேரத்தில் மற்றும் அதிகபட்ச வினைத்திறனுடன் நிறைவேற்றத் தவறியதே அரசாங்கத்திற்கு இந்த வரிப்பணம் இழப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வரி நிலுவையை திறமையற்ற முறையில் கையாள்வது குறித்து முறையான ஆய்வை மேற்கொள்ளவும், காரணங்கள் மற்றும் முறைகேடுகளை கண்டறிந்து, வரி நிலுவைகளை உடனடியாக வசூலிக்கவும் அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும், மோசடியாக, கவனக்குறைவாக அல்லது வேண்டுமென்றே, வசூலிக்கப்படும் நிலுவைத் தொகை மற்றும் அபராதங்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் தொடர்பில் நிறுவன அளவில் விசாரணை நடத்தப்பட்டு அந்த அதிகாரிகளுக்கு எதிராக உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

அண்மைய பதிவுகள்