முள்ளிவாய்க்கால் பிரகடனம்: சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழர்களின் சுயாட்சி அங்கீகரிக்கப்படல் உள்ளிட்ட ஐந்து விடயங்கள் வலியுறுத்து.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் பிரகடனம், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பால், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வெளியிடப்பட்டது.
குறித்த முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் பாராதீனப்படுத்தவியலாத சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழர்களின் சுயாட்சி அங்கீகரிக்கப்படல், அரசு படுகொலை நினைவேந்தலை தடுக்க முடியாது, தமிழினப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை, ஈழத்தமிழர்கள் தனித்துவமானர்கள், கட்டமைக்கப்பட்ட இனவழிப்பென்பதும் இனவழிப்புப் போரின் ஒரு வடிவம், உள்ளிட்ட ஐந்து விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
குறித்த முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
தமிழினப்படுகொலை முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றது. ஒவ்வொரு படுகொலைக்குப் பின்னரும் “இனிமேல் இது நடக்கவே கூடாது” என்ற உணர்வு பிரவாகம் வலுவாக எழுந்தாலும், அதுவே தொடர்கின்றது.
இனிமேல் நடக்கவே கூடாது என்ற உணர்வு பிரவாகம் அர்த்தமற்றதாகிவிட்டது.
ஈழத்தமிழினப் படுகொலை ஒரு வரலாற்று செயன்முறையாக காலணித்துவத்திலிருந்து ஆரம்பிக்கின்றது.
குறிப்பாக பிரித்தானிய காலணித்துவத்தில் 1833இல் தமிழ்,சிங்கள இராச்சியங்களை ஒன்றுபடுத்தி, பிரித்தானிய காலணித்துவம் ஒற்றையாட்சி அரசியல் அலகை சிலோனில் அறிமுகப்படுத்துவதிலிருந்து தொடங்குகின்றது.
தமிழினப்படுகொலை வரலாற்று செயன்முறையாக பரிணமித்து முள்ளிவாய்க்கால் மண்ணில் 2009இல் உச்சந்தொட்டது.
பிரித்தானிய காலணித்துவம் அறிமுகப்படுத்திய ஒற்றையாட்சி அரசியல் அலகு, சிங்கள பெரும்பான்மையிடம் அரசியல் அதிகாரத்தை மையப்படுத்தியது.
மையத்திலே குவிக்கப்பட்ட அதிகார செயன்முறை சிங்கள அரசிற்கு வன்முறை மீது ஏகபோக உரிமையை கொடுத்தது. அதை “பெரும்பான்மை சனநாயகம்” சட்ட வலுவாக்கம் செய்தது.
பிரித்தானிய காலணித்துவத்தின் புவிசார் அரசியலை மையப்படுத்திய மகாவம்ச மீள் வாசிப்பும், மகாவம்ச சிந்தனை மனநிலையும் சிங்கள தேசிய பேரினவாதத்தின் எழுச்சிக்கு வழிகோலியது.
19ஆம் நூற்றாண்டின் சிங்கள-பௌத்த தேசிய வாதத்தின் எழுச்சி “புத்தரால் வாக்களிக்கப்பட்ட நிலத்தை” மீளப்பெறுவதை மையமாகக் கொண்டது.
“புத்தரால் வாக்களிக்கப்பட்ட தேசம்” அரசியல் மயப்படுத்தப்பட்டு, இந்த தீவு சிங்கள-பௌத்தத்திற்கு மட்டுமானது என்று ஏகபோக உரிமையை சிங்கள-பௌத்த தேசியம் கையில் எடுத்தது.
வாக்களிக்கபட்ட தேசம் என்கின்ற தன்னிச்சையான அரசியல் நிலைப்பாடு இந்த தீவின் ஏனைய இனக்குழுக்களின் இருப்பை கேள்விக்குட்படுத்தியது.
தமிழினப்படுகொலையின் வழிவரைபடம் பேரரசுக்கட்டமைப்பின் புவிசார் அரசியல் நலன்களைத் தவிர்த்து உருவாக்கப்படவில்லை என்பது ஐயமுற தெரிகின்றது.
புவிசார் அரசியல் நலன்களின் பிராந்திய தளங்களில் ஏகாதிபத்தியத்தை தக்கவைப்பதற்காக பேரரசுக்கட்டமைப்பை துணைக் குத்தகைக்கு விட்டுள்ளது. அதனுடைய ஒரு வடிவமாகத்தான் இஸ்ரேலையும் சிறிலங்காவையும் அவதானிக்க வேண்டும்.
தமிழினப்படுகொலை நடந்து 15ஆவது ஆண்டில் பலஸ்தீனப்படுகொலை அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
பலஸ்தீனப்படுகொலையை உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கு தமிழினப்படுகொலைக்கும், நடைபெற்றுக்கொண்டிருக்கும் பலஸ்தீனப்படுகொலைக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமைப் பண்புகள் இருப்பதை அவதானிக்கலாம்.
தமிழின-பலஸ்தீனப் படுகொலை அரசியல் வரலாற்று பிண்ணணியில் பல்லின மக்கள் குழுமங்கள் இனத்துவ சாயத்திற்கு உட்படுத்தப்பட்டு, இனமயப்படுத்தப்பட்ட வில்லைகளுக்கூடாகவே அவதானிப்பதற்கு பழக்கப்படுத்தப்பட்டனர். காலணித்துவத்தின் மிக மோசமான விளைவுகளில் இது முக்கியமானது.
போர்க்களமாக தெரிந்தெடுக்கப்பட்ட புவியியல் பிரதேசம் இரண்டிலுமே கடலை அண்டிய பிரதேசமாகவே இருக்கின்றது.
உணவு ஆயுதமாக்கப்பட்டது.
இரு இனப்படுகொலைகளிலுமே, ஸ்ரீலங்கா அரசும், இஸ்ரேல் அரசும் ஏறக்குறைய ஒரே விதமான ஆயுதங்களையும், உத்திகளையும் பயன்படுத்தியது. வைத்தியசாலைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
வைத்தியசாலைகள் செயலிழந்து காயப்பட்டவர்கள் சிகிச்சையின்றி இறந்துபோயினர். உணவுக்காக வரிசையில் காத்துநின்றவர்கள் குண்டுகளினால் கொல்லப்பட்டார்கள்.
அநாதை இல்லங்கள் குண்டுவீசி அழிக்கப்பட்டன, குழந்தைகள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டனர். மக்களுக்காக உலர்உணவு பாதுகாத்து வைக்கப்பட்ட இடங்கள் குண்டுகளுக்கு இரையாகின.
தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் மக்களை கொல்வதற்கு பயன்படுத்தப்பட்டது.
இவ்வாறாக பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
ஆசியாவில் ஸ்ரீலங்கா தீவினதும், குறிப்பாக திருகோணமலைத் துறைமுகத்தின் கேந்திர முக்கியத்துவமும், மத்திய கிழக்கில் பலஸ்தீனத்தின் கேந்திர முக்கியத்துவமும், புவிசார் அரசியலில் கோலோச்சுவதற்கு பேரரசுக்கு மிக அவசியமானது.
பேரரசைக்கட்டமைப்பதற்கு, அதன் நலன் சார்ந்த எந்த விலையையும் கொடுப்பதற்கு பேரரசு தயாராக இருப்பதை இவை கோடிட்டுக்காட்டுகின்றன.
பேரரசும் அதன் வலையமைப்பும் உற்பத்தி செய்கின்ற இராணுவத் தளபாடங்களுக்கும், பேரரசின் பொருளாதார இருப்பிற்கும், தொடர்ந்து உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போர்க்களங்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
ஏக பேரரசை கட்டமுயலும் நாடுகள் தான் மனித உரிமையையும், பொறுப்புக்கூறலையும் போதிக்கின்றன என்பது அபத்தம். இவை இரண்டுமே ஒவ்வாத் தன்மை கொண்டவை. இது பலஸ்தீனப் படுகொலையில் மிகத்தெளிவாகவே உறுதிசெய்யப்பட்டுள்ளது.
2002 பேச்சுவார்த்தை முறிவடைவதற்கு அமெரிக்கா காரணமாய் இருந்தது என்பது ஏற்கனவே ஆய்வுகள் மூலம் வெளிவந்த உண்மையாய் உள்ளது.
அதுவே இன்று காசாவில் போர் நிறுத்தத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துகின்றது.
ஐ.நா சபையும் அதன் ஏனைய அலகுகளும், சர்வதேச சமூகமும் அதன் கட்டமைப்பும் எவ்வாறு முள்ளிவாய்க்காலில் மிகப்பெரிய மனித பேரவலத்தை தடுக்கமுடியாமல் போனதோ அதேபோல் இன்று அவர்களால் பலஸ்தீனப் படுகொலையையும் தடுக்கமுடியாமல் போனது எமக்கு ஆச்சரியத்தை தரவில்லை.
இவை அனைத்துமே மக்கள் சக்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப அழைப்பை விடுக்கின்றன. விடுதலை சார் நம்பிக்கையை அடக்குமுறைக்குட்பட்ட மக்களுக்கு புறம்பே கட்டமைக்க முடியாது. ஏனெனில் விடுதலையின் செயலிகளாக அடக்குமுறைக்குட்பட்டவர்களும், பாதிக்கப்பட்டவர்களுமே இருக்கின்றார்கள்.
விடுதலை நம்பிக்கையை மக்களிடமிருந்து அகற்றும் போர் உத்தி, தமிழ்த் தேசியத்தின் மீதான நம்பிக்கையை சிதைக்கின்ற முயற்சியாகும்.
ஈழத்தமிழினத்தின் மீதான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி, புதுப்புது வடிவங்களை எடுத்துள்ளன.
அது ஈழத்தமிழினத்தின் தன்னிறைவுப் பொருளாதாரத்தின்மீது, பண்பாட்டின்மீது, கல்வியின்மீது, ஈழத்தமிழினத்தின் மரபுகள்மீது, சைவத்தலங்கள்மீது, தொல்லியல் வரலாறுமீது, ஈழத்தமிழினத்தின் வரலாறு மீதானதாகவிருக்கலாம்.
ஈழத்தமிழினத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள உளவியல் போரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் வடிவமாகவே கருத வேண்டியுள்ளது.
உளவியல் போரின் நோக்கமாக ஈழத்தமிழினம் தமிழ்த் தேசியத்தின் மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கையைச் சிதைத்தலாகும். தமிழ்த் தேசியத்தின் நம்பிக்கை விழுமியங்கள் தான் ஈழத்தமிழினத்தின் கூட்டுப் பிரக்ஞையை விழிநிலையில் வைத்துக்கொண்டுள்ளது.
தமிழ்த்தேச நிலத்தின் மீதான போரின் பரிமாணங்களின் வடிவங்கள் எல்லாரும் அறிந்ததே. நில ஆக்கிரமிப்பு படைக்கட்டுமானத்தினூடாகவும், தொல்லியல், வனசீவராசிகள் திணைக்களத்தினூடாகவும், மகாவலி உட்பட ஏனைய அபிவிருத்தி திட்டங்கள் ஊடாகவும், சிங்கள-பௌத்த மயமாக்கலூடாகவும் தொடர்ந்தவண்ணமுள்ளது.
இவை தமிழ்த்தேச கோரிக்கையை சிதைப்பதற்கான முயற்சியாகும். தமிழ்த் தேசக் கோரிக்கையை சவாலுக்குட்படுத்துவதினூடு ஈழத்தமிழினத்தின் இருப்பை கேள்விக்குட்படுத்தல் மிக இலகுவாக முன்னெடுக்கப்படுகிறது.
ஈழத்தமிழினத்தின் அகமுரண்பாடுகளான சாதியம், ஆணாதிக்கம், மத அடிப்படைவாத கூறுகளை தூண்டிவிடுகின்ற போக்கு மிக அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
தமிழ்த் தேசியம் ஒரு முற்போக்கான கருத்தியல், அது ஏற்கனவே இவ் அக முரண்பாடுகளை அலசி ஆராய்ந்துள்ளது. அதற்கான தீர்வை நோக்கி பயணித்துள்ளது, பயணிக்கின்றது.
ஈழத்தமிழினத்தின் இளைய தலைமுறையை கூட்டு விடுதலை விழி நிலையிலிருந்து திசைதிருப்புவதற்காக போதைப்பொருள் வடக்கு-கிழக்கில் தாராளமாக பாவனைக்கு விடப்பட்டுள்ளது.
சினிமா பாணியில் வெவ்வேறு குழுக்களை உருவாக்கி, உட்பூசலை தக்கவைத்துக்கொண்டிருக்கின்றது. கேளிக்கை நிகழ்வுகளை ஒழுங்கமைத்து கதாநாயக மையவாழ்வியல் செல்நெறியை உருவாக்கின்றது. கதாநாயக மைய வாழ்வியல் நீரோட்டம் சுய திறனாய்வுச் சிந்தனையைச் சிதைக்கின்றது.
பாசமிகு ஈழத்தமிழ் உறவுகளே, முன்னெப்பொழுதுமில்லாதவாறு ஈழத்தமிழினம் தனது இருப்பின் மீதான அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது.
ஈழத்தமிழினத்தின் இருப்பை சவாலுக்குட்படுத்தும் அலகுகளை எதிர்த்து போராட வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்திற்குள் ஈழத்தமிழினம் வலிந்து நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுக் கடமை ஒட்டுமொத்த ஈழத்தமிழினத்திற்கானது. யாரும் இப்பாரிய பொறுப்பிலிருந்து விலகிச்செல்லமுடியாத வரலாற்றுத் தேவைக்குள் நாம் இருக்கின்றோம்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் குறியீடு மட்டுமல்ல, அடக்குமுறை எதிர்ப்பின் குறியீடும் கூட. முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு நாளில் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட உறவுகளை நினைக்கையில் அவர்கள் சுமந்து வந்த கனவுகளையும், இலக்குகளையும் நினைத்து, குருதி உறைந்து சிவந்து போன மண்ணிலிருந்து சபதம் எடுக்கின்றோம்.
எத்தடைவரினும் எமது இலக்கை அடைவோம் என்று எம் உறவுகளின் கல்லறைகள் மீது உறுதி எடுக்கின்றோம்.
தமிழினப்படுகொலையின் 15ஆவது நினைவேந்தல் நாளில் பின்வருவனவற்றை மீளவும் வலியுறுத்துகின்றோம்.
நினைவுகூரல் கூட்டுரிமை சார்ந்தது மட்டுமல்ல பண்பாட்டு உரிமையும் கூட ஆகவே சிறிலங்கா அரசு தமிழினப் படுகொலை நினைவுகூரலைத் தடுக்க முடியாது.
ஈழத்தமிழினம் தமிழினப் படுகொலைக்கான நீதியை சர்வதேச விசாரணைக்கூடாகவே கோரி வருகின்றது, அக்கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம்.
ஈழத்தமிழினம் ஒரு தனித்துவமான தேசத்திற்குரிய அலகுகளை தன்னகத்தே கொண்ட இனம்.
கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கூடாக தமிழின இருப்பு கேள்விக்குட்படுத்தப்படுகின்றது, இதுவும் இனவழிப்புப் போரின் ஓர் அங்கமென நாம் கருதுகின்றோம்.
தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்திற்குரியவர்கள் என்பதையும்இ தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் ஒருபோதும் பராதீனப்படுத்தவியலாத சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும்.
எம் பாசமிகு உறவுகளே, தமிழ்தேசிய விடுதலை தரும் நம்பிக்கையுடன் தொடர்ந்தும் பயணிக்க முள்ளிவாய்க்கால் பொதுக்கட்டமைப்பு அழைப்புவிடுக்கின்றது.