அரசு எங்கள் மீது தாக்கினாலும் கடல் வளம் பாதுகாக்க யாழ்.இந்தியத் துணைத் தூதரகம் முன்னே போராடுவோம். அந்தோனிப்பிள்ளை பிரான்ஸிஸ் ரட்ணகுமார் தெரிவிப்பு

3 days ago



புதிதாகப் பதவியேற்றுள்ள அரசு எங்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டாலும் கட்டைகொண்டு தாக்கினாலும் எங்களின் கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கு யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகம் முன்பாகப் போராட்டம் செய்வோம் எனயாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தின் உபதலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்ஸிஸ் ரட்ணகுமார் தெரிவித்துள்ளார்.

அவர்மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசாங்கம் வந்த பின்னர் நிறைய இழுவை மடிப்படகுகள் உள்நுழைந்து எங்களது வளங்களை அழிக்கின்றன.

கடந்த காலத்தில் நாங்கள் போராட்டத்தை நடத்திய போது, இந்திய இழுவைப் படகுகள் குறித்து தமது தலைவருக்கு உடனடியாகத் தெரியப்படுத்துவோம்.

நடவடிக்கை எடுப்போம் எனத் தற்போதைய கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்தார்.

இருப்பினும் கடற்றொழில் அமைச்சர் புதிதாக பதவியேற்ற பின்னரும் கூட நெடுந்தீவு தொடக்கம் சுண்டிக்குளம் வரையிலான கடற் பகுதியில் இந்திய இழுவைப்படகுகள் எமது வளங்களைச் சூறையாடுகின்றன.

இவற்றை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஜனாதிபதியும் கடற்றொழில் அமைச்சரும் இதற்கு ஒரு சரியான முடிவை எடுக்காவிட்டால். யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் செய்யும் மக்கள் இணைந்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்துக்கு முன்னால் பெரும் போராட்டத்தில் குதிப்போம் - என்றார்.