யாழில் காற்றின் தரம் தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளுமாறும், பாதகமான காரணி எனில் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவு

3 weeks ago



யாழ்.மாவட்டத்தின் காற்றின் தரம் தொடர்பில் ஒரு மாத காலத்திற்கு தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும், பாதகமான காரணிகள் இருப்பின் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், பரிசோதனைகளின் போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தீங்கு விளைவிக்கக் கூடிய அளவில் காற்றின் தரம் காணப்படுமாயின் அது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் பொறிமுறையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த திருமதி உமாசுகி நடராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சசி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட யாழ் குடாநாட்டுப் பிரதேசத்தின் காற்றின் தரம் தொடர்பில் பொறுப்பான அரச நிறுவனங்களால் முறையான விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரவின்மத்ரநாத் தாபரே நீதிமன்றில் தெரிவித்தார்.

சமர்ப்பிக்கப்பட்ட காரணிகளை பரிசீலித்த நீதிமன்ற அமர்வு, சம்பந்தப்பட்ட மனுவை விசாரிக்க அனுமதித்து இந்த உத்தரவை பிறப்பித்தது.

இதையடுத்து மனு மீதான விசாரணை மார்ச் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.