முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட படைத்தலைமையகங்களின் பெயர்கள் நீக்கப்பட்டதுடன், அவற்றுக்கான படை முகாம்களும் அகற்றப்பட்டுள்ளன.
நீக்கப்பட்ட தலைமையகங்கள் யாழ்ப்பாணம், வன்னி படைத் தலைமையகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன என்று பி. பி. சி. இணையம் தெரிவித்துள்ளது
போர் காலத்தில் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், வன்னி, கிளிநொச்சி, முல்லைத்தீவு என நான்கு படைத் தலைமையகங்கள் செயற்பட்டன.
இவற்றுக்கென தனியான படை முகாம்கள் அவற்றை நிர்வகிக்க தனியான தளபதிகளும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே முல்லைத்தீவு, கிளிநொச்சி படை தலைமையகங்கள் கலைக்கப்பட்டு வன்னி, முல்லைத்தீவு யாழ்ப்பாணம் படைத்தலைமையகங்களின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
கிளிநொச்சி படைத்தலைமையகத்தின் ஒரு பகுதி யாழ்ப்பாண படை தலைமையகத்தின் கீழும் மற்றோர் பகுதியும் முல்லைத்தீவு படைத் தலைமையகமும் வன்னி படைத் தலைமையகத்தின் கீழும் இணைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், வடக்கு மாகாணத்தில் சுமாராக 73 ஆயிரத்து 16 ஏக்கர் நிலமும் கிழக்கு மாகாணத்தில் 12 ஆயிரத்து 236 ஏக்கர் நிலமும் இராணுவத்தின் வசமிருந்தன.
இவற்றில் வடக்கில் 63 ஆயிரத்து 187 ஏக்கர் நிலமும் விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும், 9 ஆயிரத்து 828 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படவுள்ளது என்று மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, கிழக்கு மாகாணத்தில் 8 ஆயிரத்து 772 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 464 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேசமயம், போர் காலத்தில் இராணுவ தேவைக்காக எடுக்கப்பட்ட நிலத்தில் 27 ஆயிரத்து 496 ஏக்கர் நிலம் இன்னமும் படைகள் வசம் இருக்கின்றன என்று தேசிய பாதுகாப்பு ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் கேணல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இவை படிப் படியாக மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணத்தில் சிறிய முகாம்கள் பல அகற்றப்பட்டுள்ளன.
அந்த நிலங்கள் மீளவும் மக்களிடம் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் ஓர் இராணுவ அதிகாரி கூறியுள்ளார்.
சிறிய முகாம்கள் அகற்றப்பட்டுள்ள போதிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவையும் குறைக்கப்படவில்லை. எந்தத் தாக்குதலையும் எதிர்கொள்ள படைகள் தயாராக உள்ளனர் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.