கடத்தல்காரரின் அபிலாஷைக்கு ஏற்றவாறு சுகாதார அமைச்சோ அரசோ ஒருபோதும் செயல்படாது.-- சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு

1 day ago



உலகிலேயே அதிக இலாபம் ஈட்டும் வர்த்தகமாகவும் கடத்தல் தொழிலாகவும் மாறியுள்ள மருந்துத்துறையில் நிலவிவரும் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதுடன் அவற்றை சீர்செய்ய முன்னின்று உழைக்கும் அனைத்து ஊழியர்களையும் பலப்படுத்தவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் அரசாங்கம் நிச்சயமாக முன்நிற்கும்.

கடத்தல்காரர்கள் மற்றும் அவ்வாறான குழுக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்றவாறு சுகாதார அமைச்சோ அரசாங்கமோ ஒருபோதும் செயல்படாது என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக, திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த சுகாதார அமைச்சர் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துப் பொருட்களின் பாதுகாப்பு, தரம் மற்றும் அவற்றின் செயல்திறன் தொடர்பில் தர நிலைகளை உறுதி செய்வதன் மூலம் சுகாதாரத் துறையை பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் தனது முதன்மையான பங்களிப்பை வழங்கி வருகிறது.

மருந்துப் பொருட்கள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்களின் பாதுகாப்பு, தரம் மற்றும் செயல் திறனை உறுதிபடுத்துவதற்கான தர நிர்ணயதை கண்காணிப்பு மற்றும் சான்றுகளின் ஊடாக வழங்கி வருகிறது.

இந்நாட்டு மருந்துக் கொள்ளையை வெளிப்படுத்துவதற்காக மருந்து நிறுவனங்களுடன் அர்ப்பணிப்புடன் தொடர்ச்சியாக போராடிய பேராசிரியர் சேனக பிபில இறுதியில் கொலை செய்யப்பட்டார்.

இந்த தருணத்தில் அவரது வீரச்செயலை நினைவு கூர கடமைப்பட்டுள்ளேன்.

அவ்வாறு இதுவரை கொலைகள் ஏதும் நடைபெறவில்லை.

எனினும் கடத்தல்காரர்கள் வேறு நுணுக்கமான செயன்முறைகளை கையாண்டு தமது இலட்சியங்களை அடைவதற்காகவே செயல்படுகின்றனர்.

ஆகையால் அரசாங்கத்தின் திட்டத்தை சீர்குலைக்க முயல்பவர்கள் தொடர்பில் நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் - என்றார்.