இலங்கையின் தேங்காய் ஏற்றுமதிக்குத் தடையாக அரச படைகளே காணப்படுவதாக எம்.பி து.ரவிகரன் பாராளுமன்றில் சுட்டிக்காட்டு

வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான தெங்குப் பயிற்செய்கைக் காணிகள் உட்பட பல காணிகளை அரசபடைகள் அபகரித்து வைத்துக் கொண்டு இந்த நாட்டின் தேங்காய் ஏற்றுமதிக்குத் தடையாக இந்த நாட்டின் அரச படைகளே காணப்படுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினர் அபகரித்துள்ள மக்களின் பூர்வீகக் காணிகளில் அதிகளவு தெங்குப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதையும், அக்காணிகளின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த காணிகள் இராணுவத்தின் பிடியிலிருந்து உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
தேங்காய் ஏற்றுமதி செய்வதற்கு இடையூறுகள் காணப்படுகின்றன.
குறிப்பாக வடக்கு - கிழக்கில் மக்களுக்குச் சொந்தமான காணிகளை படையினர் இன்னமும் விடுவிப்பு செய்யப்படவில்லை.
புதிய ஆட்சியின்்பின்னர் வடக்கு-கிழக்கில் ஒரு சில இராணுவ முகாம்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் இன்றளவில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள், மக்களின் வாழ்வாதார நிலங்கள் படையினரின் வசமே உள்ளன.
பூர்வீக நிலங்களை இழந்து அகதிகளாக இடைத்தங்கல் முகாம்களிலும், உறவினர்களின் அரவணைப்பிலுமே இவர்களின் வாழ்க்கை கழிகின்றது.
போர் மௌனித்து பதினைந்தாண்டுகள் ஆகியும் கூட இன்னமும் அகதிகளாக நாட்டின் குடிமக்கள், தமிழ் மக்கள் வாழும் அவல நிலையை எண்ணிப் பாருங்கள்.
தமிழர்களை அவர்களின் வாழிடங்களிலேயே வாழவிடுங்கள்.
இவற்றில் ஒன்றாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் கேப்பாபிலவு,
புலக்குடியிருப்பு மக்களின் அவலநிலை இன்னும் தீர்ந்தபாடில்லை.
அதிலிருந்து மீண்டவர்கள் சிலர். இன்னும் 54 குடும்பங்கள் தங்களைத் தங்களுடைய பூர்வீக இடத்தில் குடியமர்த்தமாட்டார்களா என்ற ஏக்கத்தோடு இடைத்தங்கல் முகாம்களிலிருந்து பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
தங்களுடைய சொந்த இடத்தில் இருந்தபோது எந்தக்குறையும் தங்களுக்கு இல்லை.
வளமானபூமி, ஒரு பக்கம் ஆறு. அதனால் மீன், இறாலுக்கு பஞ்சமில்லை.
தங்களுடைய காணியில் குடியிருப்பு நிலம் தவிர்ந்த மிகுதி நிலத்தில் காலங்களுக்கேற்ப பயன்தரக் கூடிய தோட்டச்செய்கை, வயல்கள், இது தவிர தென்னைகள் தாராளமாக ஒவ்வொரு காணிகளிலும் உண்டு.
இன்றைய தேங்காயின் விலை மிகமிக அதிகம். எண்ணிப் பாருங்கள் மக்கள் எவ்வளவு வேதனைப்படுவார்கள்.
இப்படி சகல விதத்திலும் தங்களின் பூர்வீக காணிகளில் பயன்பெற்று வாழ்வாதாரத்தை ஈடுசெய்து வாழ்ந்து வந்த குடும்பங்கள், தற்போது மிகவும் நொந்துபோயுள்ளார்கள்.
நான் ஏற்கனவே குறிப்பிட்ட 54 குடும்பங்களின் 55 ஏக்கர் நிலம் விடுபடாமல் இராணுவம் அபகரித்து வைத்துள்ளது.
இதில் சில காணிகள் பலத்த நிலமீட்புப் போராட்டங்களின் பின்புதான் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டன.
அதேபோல அந்த மக்களின் பிரதிநிதியாகக் கேட்கின்றேன்.
54 குடும்பங்களின் காணிகளையும் விடுவிப்புச் செய்யுங்கள்.
பொறுப்பாக இருக்கும் அமைச்சுக்கள் இந்த மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
