மாவீரர்களது தியாகத்தையும் போரில் கொல்லப்பட்ட மக்களையும் நெஞ்சில் நிறுத்தி சங்கு சின்னத்துக்கு வாக்களிப்போம் என அனந்தி தெரிவிப்பு.

3 months ago


தமிழின விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர்களது தியாகத்தையும் போரின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களையும் நெஞ்சில் நிறுத்தி செப்ரெம்பர் 21 ஆம் திகதி தமிழ்ப் பொது வேட்பாளரின் சங்கு சின்னத்துக்கு வாக்களிப்போம் என வடமாகாண முன்னாள் மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்டு வரும் 'நமக்காக நாம்' பரப்புரை நடவடிக்கை அச்சுவேலி விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே அனந்தி சசிதரன் இவ்வாறு தெரிவித்தார்.

எனது கணவர் எழிலனை இராணுவத்திடம் நேரடியாக கையளித்து இன்று 15 ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை. சர்வதேச அளவில் நீதி கேட்டு போராடிக் கொண்டிருக்கிறேன்.கடந்த தேர்தல்களில் மாறி மாறி சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்தோம். ஆனால் எவரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இரண்டு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்தார். இம்முறை தமிழ் மக்கள் சார்பில் கூட்டாக பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் கொண்டு வரப்பட்டுள்ளார்.

தமிழர்களுடைய வாக்கு தமிழருக்கே என்ற அடிப்படையில் நாங்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும்.

தமக்காக வாழாது எமது மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் உயிர் நீத்த மாவீரர்களது தியாகத்தையும் போரின்போது கொல்லப்பட்ட மக்களது இழப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி தமிழர்களின் உரிமைச் சின்னமான சங்கு சின்னத்திற்கு நேராக ஒரே ஒரு புள்ளடியை போட்டு தமிழர்களின் ஒற்றுமையை எடுத்துக் காட்ட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். 

அண்மைய பதிவுகள்