தமிழ் பொதுவேட்பாளராக போட்டியிட்டால் தடுக்க முடியாது - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு
நாட்டில் ஜனாதிபதித்தேர்தலில் யாரும் போட்டியிட முடியும். தமிழ்ப்பொதுவேட்பாளராக யாரும் போட்டியிட்டால் அதைத் தடுக்க முடியாது இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியினரை, மார்ட்டீன் வீதியிலுள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று இரவு சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
'தமிழ் பொதுவேட்பாளர் குறித்து ஜனாதிபதி வேட்பாளர் என்ற வகையில் உங்களது கருத்து என்ன?' என்று சஜித் பிரேமதாஸவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், நான் ஜனநாயகவாதி. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு நான் யாரையும் கட்டாயப்படுத்தமாட்டேன்.
அவ்வாறு கட்டாயப்படுத்துவது ஜனநாயகவாதம் அல்ல. ஜனாதிபதி வேட்பாளராக ஒருவர் தேர்தலை கேட்க முனைகின்றபோது அதனைத் தடுக்கவும் முடியாது.
ஏனென்றால் இது ஒரு ஜனநாயக நாடு என்று பதிலளித்தார். தமிழ் அரசுக் கட்சியினருடனான சந்திப்புத் தொடர்பில் கேட்டபோது, வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கல்விக்கு கூடுதல் கவனம் செலுத்துவது தொடர்பில் ஆராய்ந்தோம்.
அதேபோல, பிரதேச செயலகம் மற்றும் கிராம மட்டங்களில் கல்வி தொடர்பான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு நாங்கள் கல்விக்கு அதிகளவு நிதியொதுக்கி, வடமாகாணத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் கலந்துரையாடினோம் என்றார்.
கிளிநொச்சியில் வைத்து 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாகத் தெரிவித்திருந்தீர்கள். காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தையும் வழங்குவதாக அர்த்தப்படுத்தலாமா? என்ற கேள்விக்கு, 13ஆவது திருத்தச் சட்டம் இன்று நேற்று வந்தது அல்ல. அது புதிதாக வானத்திலிருந்து குதித்ததும் அல்ல. அன்றிலிருந்து வருகின்றது. இது தொடர்பான பிரச்சினைகளும் அப்படித்தான். நாடாளுமன்றத்தின் ஊடாக இதிலுள்ள பிரச்சினைகளைச் சரிசெய்யமுடியும். அதற்குரிய விடயங்களும் நடக்கின்றன - என்றார்.