விடுதலைப் புலிகளின் காலத்தில் நடைமுறையில் இருந்த கற்பகச் சோலை பனை நடுகைத் திட்டம் மீள ஆரம்பம் சகாதேவன் தெரிவிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் நடைமுறையில் இருந்த கற்பகச் சோலை" பனை நடுகைத் திட்டத்தினை மீள ஆரம்பித்து பனை வளத்தை மேம்படுத்த உள்ளதாக பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் தெரிவிக்கையில்-
தமிழர்களுக்கும் பனை மரத்திற்கும் இலங்கை தீவிற்குள் ஒரே நிலை தான் காணப்படுகின்றது.
இலங்கையை விட தென்கிழக்காசிய நாட்டில் பின்னர் உருப்பெற்ற பனைவளம் இன்று அந்தப் பிராந்தியத்தில் உயர்வளமாக உள்ளது.
எமது நாட்டிற்கே உரித்தான பனை பல கோடிக்கணக்கான பனை மரங்கள் யுத்த காலத்திலும் யுத்தத்தின் பின்னரும் அபிவிருத்தி நோக்கிலும் அழிக்கபட்டு வந்துள்ளன.
ஆகவே எமது பனை அபிவிருத்தி சபை கடந்த காலத்தில் விட்ட தவறுகளின் நிமித்தம் அதற்கான நிதி பனைமர நடுகைக்காக காணப்படவில்லை.
இன்று தன்னார்வமாக பலர் பனை மரங்களை நாட்டி வருகின்றனர்.
இதனடிப்படையில் குறித்த செயற் திட்டங்களை நாம் ஊக்குவிக்க வேண்டும்.
இந்த நடுகையில் ஈடுபடுபவர்களை நாம் ஊக்குவிக்கும் முகமாக நாம் தொழில் நுட்ப உதவி உட்பட கௌரவிப்புக்களையும் மேற்கொள்ள உள்ளோம்.
வளம் மேம்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது.
இதன் அடிப்படையில் கார்த்திகை மாதம் புனிதமான வாரம் மர நடுகை மாதமாக இது காணப்படுகிறது.
தமிழ் மக்கள் இந்த காலத்தில் பனை மரத்தினை நடுகை செய்ய வேண்டும்.
யுத்தகாலத்தில் விடுதலைப் புலிகளின் பொருண்மியத் துறையினால் கற்பகச்சோலை எனும் திட்டத்தின் கீழ் 2010 ஆம் ஆண்டு 10 கோடி பனை மரங்களை நாட்டும் திட்டத்தின் கீழ் பனம் விதைகள் நாட்டப்பட்டன.
அந்த காலத்தில் நாட்டப்பட்ட பனை மரங்கள் பல இன்று பயன்தரு நிலைக்கு வந்திருந்தாலும் இதனடிப்படையில் இந்த மரநடுகை மாதத்தில் கற்பகச்சோலை திட்டத்தை மீள உருவாக்கி கடந்த காலத்தில் செய்யப்பட்டவர்களுக்கு "பனை காவலர் என்ற விருதினையும் வழங்கவுள்ளோம்.
பாடசாலை மாணவர்களுக்கு "கற்பக செல்வம்" என்ற திட்டமும் ஊடகவியலாளர்களுக்கு "கற்பக ஓலைத் திட்டம்* இளைஞர்களுக்கான பனை வீரர்கள் திட்டம்" மேலும் பனை ஏற்றுமதியாளர்களுக்கு சந்திப்பு ஒன்றினையும் முன்னெடுக்கவுள்ளோம்.
இன்றைய காலகட்டத்தில் பனை மரக் கணக்கெடுப்பின் பொழுது இளம் பனைமரங்கள் தவிர்க்கப்படுவதும் வெட்டி அழிக்கப்படுவதும் வழமையாக உள்ளது.
டிஜிட்டல் கணக்கெடுப்பு முறையினை முன்னெடுக்கவுள்ளோம்.
பனை வெட்டுவதற்கான முறை என்பது அதனை மீள் நடுகை செய்யும் ஒன்றாக அமைய வேண்டும்.
பனை சம்பந்தமான கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிப்ப தோடு அவர்களுக்காக எமது பனை ஆராய்ச்சி மையம் திறந்துள்ளது.
மேலும் திக்கம், வரணி, சங்கானையில் உள்ள வடிசாலைகள் மீள கூட்டுறவாளர்களுக்கு வழங்கி உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். கள் உற்பத்தி நிலையங்களில் பதனிடுவதற்கு மீள அனுமதிகளை வழங்கவுள்ளோம்.
தென்பகுதியில் இருந்து இங்கு வந்து விற்பனையாவதை தடுப்பதற்கு நடவடிக்கை ஏற்படுத்தவுள்ளோம்.
மேலும் கள்ளுற்பத்திக்கான தொழில் தகைமை சான்றிதழை வழங்கி பாடத்திட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளோம்.
மேலும் கோழித்தீவனம் மற்றும் கால்நடை தீவன இறக்குமதியை கட்டுப்படுத்த பனை உற்பத்தியின் மூலம் வெற்றிகண்டுள்ளோம்.
பனை ஆடை உற்பத்தி, உயிரியல் முறை மின்சார உற்பத்தி மற்றும் கூட்டுறவுடன் இணைந்து நாம் செயற்பட்டாலும் சில சட்டவிரோத செயற்பாடுகளை தவிர்க்க இணைந்து செயற்படவுள்ளோம்.
பனை சார் ஏற்றுமதியாளர்களுக்கான கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
மேலும் உலகெங்கிலும் வாழும் உறவுகளுக்காக பனை சார் உற்பத்திகள் தயாராக உள்ளன. - என அவர் மேலும் தெரிவித்தார்.