சமூக வலை, நிகழ்நிலைத் தளங்களில் பெண்களுக்கு எதிரான மீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்.-- இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அரசை வலியுறுத்தல்.

8 hours ago



சமூக வலைத்தளங்கள் உள்ளடங்கலாக நிகழ்நிலைத் தளங்களில் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கும் மீறல்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...

பெண் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் அவர்களது துறை சார்ந்தோராலும், பொதுமக்களாலும் வாய்மொழி மூலமீறல்கள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு தொடர்ந்து ஆளாகி வருகின்றனர்.

முக்கியமாக சமூக வலைத் தளங்களில் பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் அத்துமீறல்கள், அவதூறுகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நாம் பரந்துபட்ட அவதானத்தைச் செலுத்தியுள்ளோம்.

ஒவ்வொரு நபரினதும் கருத்துச் சுதந்திரத்துக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டிய அதேநேரத்தில், ஏனையோரின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் என்ற நோக்கத்துக்காக அரசாங்கம் அந்தச் சுதந்திரத்தை சட்டரீதியாக மட்டுப்படுத்த முடியும்.

நிகழ்நிலை தளங்களில் நிகழ்த்தப்படும் மீறல்கள் தொடர்பில் பக்கச் சார்பற்ற விசாரணைகளை முன்னெடுத்து. பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை வழங்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பதிவேற்றப்படும் பதிவுகளை அகற்றுவதற்கும். அதுதொடர்பான முறைப்பாடுகளை உரிய காலப் பகுதியில் விசாரணை செய்து பூர்த்தி செய்வதற்குமான கட்டமைப்பை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - என்றுள்ளது.