தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் வெளியில் இல்லை, வாக்குகள் மூலமாக சேர்ந்து பெற வேண்டும். வேட்பாளர் தர்சிகன் தெரிவிப்பு

2 months ago



தமிழ் மக்கள் தாங்கள் எதிர்பார்க்கின்ற மாற்றங்கள் நிச்சயம் வெளியில் இல்லை, உங்களுடைய வாக்குகள் மூலமாக நாம் அனைவரும் சேர்ந்து பெற்றுக் கொள்ள வேண்டியது என்பதை உணர வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டமைப்பின் வேட்பாளரும் யாழ் பல்கலைக்கழக மாணவனுமான மசனையா தர்சிகன் தெரிவித்தார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் கரும்பலகைச் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுவினரின் ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. 

இதன்போது சுயேட்சை குழுவில் போட்டியிடும் மசனையா தர்சிகன், தமது அணியின் கொள்கை திட்டத்தை பற்றி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

அ. ஈழத் தமிழ் மக்களாகிய நாம் பேரினவாத சிங்கள அரசியல் தலைவர்களாலும் இனவாத செயற்பாட்டாளர்களாலும் தற்போது எதிர்நோக்கும் இன அழிப்பு, ஒடுக்கு முறைகள், அச்சுறுத்தல், காணாமல் ஆக்கப்படுதல், நில ஆக்கிரமிப்பு, வளச்சுரண்டல் போன்ற பல்வேறு இனவாத மனித உரிமை மீறல் செயற்பாடுகளுக்கு தீர்வுகாணல். 

01. இவ்வாறான இனவாத செயற்பாடுகளால் தற்போது எமது மக்கள் எதிர்நோக்கும் சவால்களான,

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சனைகள். 

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சனைகள்.

முப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகள் தொடர்பான பிரச்சனைகள்.

கிழக்கில் மக்கள் எதிர்நோக்கும் மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சனைகள்.

எமது எல்லைப்புற கிராமங்களில் நிகழும் அத்துமீறிய ஆக்கிரமிப்புகள் மற்றும் குடியேற்றங்கள்.

தமிழர் தேசத்தில் தமிழரின் இருப்பை பாதிக்கின்ற திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்கள்.

எமது மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு விதமான சவால் மிக்க பிரச்சினைகள். 

வரலாற்று மரபு ரீதியான தமிழர் அடையாளங்களை இல்லாது அழித்தொழிக்கும் பல்வேறு அரச இயந்திரங்களால் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள். 

தொடர்பாக அனைத்தையும் சரியாக இனம் கண்டு முறையாக ஆவணப்படுத்துவோம்.

02. இவற்றிற்கு எதிராக சட்டங்களை முறையாக கையாளுவதுடன், மக்கள் எதிர்நோக்கும் இவ்வாறான பிரச்சினைகளை சரியான முறையில் பாராளுமன்றில் வெளிக்கொண்டு வருவோம்.

03. இவற்றிற்கு எதிராக மக்கள் மயப்படுத்தப்பட்ட பல்வேறு விதமான எதிர்ப்பு நடவடிக்கைகளை முழுமூச்சுடன் முன்னெடுப்போம். 

04. முறையான வெளியுறவுக் கொள்கைகள் மூலம் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் ஏற்படுத்துவதன் மூலம் இவற்றுக்கு தீர்வு காண்போம்.

ஆ. இலங்கையில் இனவாத செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து தெற்கு அரசியலால் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பு மற்றும் ஒடுக்கு முறைகளுக்கு சர்வதேச பொறிமுறைகளின் ஊடாக நிவாரணங்களை பெற்றுக் கொள்வதோடு, மீள இவ்வாறான இன அழிப்பு மற்றும் ஒடுக்கு முறைகள் பேரினவாத சிங்கள செயற்பாட்டாளர்களால் தமிழ் மக்கள் மீது ஏற்படாமையை உறுதி செய்தல்.

01. இலங்கையில் இனவாத செயற்பாடுகள் ஆரம்பமான காலம் தொடக்கம் இன்று வரை பேரினவாத சிங்கள செயற்பாட்டாளர்களால் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல் செயற்பாடுகளை முறையாக ஆவணப்படுத்துவோம்.

02. 2009 ஆம் ஆண்டு வன்னி பிராந்தியத்தில் சிங்கள பேரினவாத அரசியல் தலைமைகளால் அரச இயந்திரங்களைக் கொண்டு நிகழ்த்திய மனித உரிமை மீறல் செயல்பாடுகளை சிறப்பு ஆவணப்படுத்துவோம். 

03. 2009 ஆம் ஆண்டு ஆயுத போர் நிறைவுற்ற காலம் தொடக்கம் இன்று வரை தமிழர் பிரதேசங்களில் நிகழ்ந்த மற்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் அரச பொறிகளூடான இன அழிப்பு மற்றும் அத்துமீறல் செயல்பாடுகளை முறையான ஆவணப்படுத்துவதோடு இவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் உடனடியாக செயற்படுவோம்.

04. சர்வதேச ரீதியில் மனித உரிமை மீறல் செயற்பாடுகளுக்கு எதிரான பொறிமுறைகளின் ஊடாக முறையான வெளியுறவு கொள்கைகளை பாவித்து குற்றம் நிகழ்த்தியவர்களுக்கு தண்டனைகளை பெறுவதுடன் எமக்கான நிவாரணங்களையும் பெற்றுக்கொண்டு, மீள இவ்வாறான இன அழிப்பு மற்றும் ஒடுக்கு முறைகள் நிகழாமையை உறுதி செய்ய முழுமூச்சுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுவோம்.

05. நடுநிலையான மூன்றாம் தரப்பின் தலையீட்டுடன் இணைந்த வடக்கு கிழக்கு மக்களுடன் புலம்பெயர் தேசத்தவர்களையும் உள்வாங்கி ஜனநாயக ரீதியிலே சர்வஜன வாக்கெடுப்பை நிகழ்த்தி ஈழத்தமிழ் மக்கள் தமக்கான தீர்வை பெற்றுக்கொள்ள தக்க விதத்திலே சரியான வெளியுறவு கொள்கைகளுடன் செயலாற்றுவோம்.

இ. எமது மக்களுக்கான நிலையான அபிவிருத்தியுடன் ஈழத் தமிழ் மக்களுக்கான தீர்வினை நாமாக அடையும் விதத்தில் எதிர்கால அரசியல் செயற்பாடுகள். 

01. மக்கள் ஆணையுடனான எமது வெற்றியை தொடர்ந்து தமிழ் இளையோர் கூட்டமைப்பானது தமிழ் மக்கள் கூட்டமைப்பாக அரசியல் கட்சியாக ஜனநாயக ரீதியிலே பதிவு செய்யப்படுவதோடு நாம் ஓர் மக்கள் இயக்கமாக கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி எமது பயணம் என்றும் சரியான பாதையிலே சென்றடையத்தக்க யாப்பு ஒன்றினை எமது நோக்கத்திற்காக புத்திஜீவிகள், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள், சிவில் பொது அமைப்புகள், மதக்கட்டமைப்புகள் மற்றும் புலம்பெயர் தேசத்தவர்களின் ஆலோசனைகளை உள்வாங்கி உருவாக்கிக் கொள்வோம். 

02. தொடர்ச்சியாக எமது கட்டமைப்பு ரீதியான ஜனநாயக அரசியல் இயக்கத்தின் நோக்கங்களை சரியாக விளங்கிக் கொண்டு எமது செயற்பாடுகளுடன் சேர்ந்து தமிழ் மக்கள் கூட்டமைப்பாக பயணிக்க வரும் தலைவர்களையும் அனைத்து செயற்பாட்டாளர்களையும் முறையாக ஆராய்ந்து பரிசீலனைப்படுத்தி அவர்களை எமது மக்கள் இயக்கத்தின் அங்கத்தவர்களாக சேர்ப்பதோடு நாம் தமிழ் மக்கள் கூட்டமைப்பாக முறையான கட்டமைப்பு ஒன்றினை வடக்கு கிழக்கு முழுவதையும் உள்வாங்கி கட்டமைப்போம்.

03. தாயகத்திலே பிறக்கின்ற எமது தமிழ் மக்கள் கூட்டமைப்பானது புலம்பெயர் தேசத்திலே பல ஏக்கங்களுடன் வாழ்ந்து வருகின்ற எமது தாய்மண் உறவுகளில் இருந்தும் எம்மோடு சேர்ந்து பயணிக்க விரும்புகின்ற செயற்பாட்டாளர்களை முறையாக ஆராய்ந்து பரிசீலனை செய்து எமது மக்கள் இயக்கத்தில் உள்வாங்கி தாயகத்திலும் புலத்திலும் முறையாக தமிழ் மக்கள் கூட்டமைப்பினை கட்டமைப்போம்.

04. முறையாக கட்டமைக்கப்பட்ட எமது தமிழ் மக்கள் கூட்டமைப்பு இயக்கத்திற்கு ஊடாக சிறந்த தன்னிறைவு பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கப்படுவதோடு சுய தொழில் முனைவோர்களின் கைகளை வலுவடையச் செய்வதன் மூலமாகவும் பல புதிய விவசாய, வியாபார, கைத்தொழில், மீன்பிடி மற்றும் ஏற்றுமதி உற்பத்தி வாய்ப்புகளை ஏற்படுத்துவதூடாக எமது இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகளை உருவாக்குவோம்.

05. பல்வேறு மக்கள் நலச் செயற்பாடுகளை முன்னெடுத்தல்.

கல்வி, விளையாட்டு மற்றும் திறன் அபிவிருத்தி செயல்திட்டங்கள். 

பாரம்பரிய மருத்துவத்தினை அபிவிருத்தி செய்தலும், நவீன மயப்படுத்தப்பட்ட சுகாதார நலத்திட்டங்களும்.

எமது தேச வளங்களை சரியான திட்டமிடல்களுடன் பயன்படுத்தலும், பாதுகாத்தலும்.

நவீன மயப்படுத்தப்பட்ட முறையான கலாச்சார பண்பாடும் பாரம்பரியங்களை பாதுகாத்தலும். 

முறையான ஆரோக்கியமான பொழுதுபோக்கு அம்சங்கள். 

கடந்த கால மற்றும் நிகழ்கால அனைத்து செயற்பாடுகளிலும் முறையான ஆவணப்படுத்தலும், எதிர்கால திட்டமிடலும். 

குறிப்பிட்டவாறு பல்வேறுபட்ட மக்கள் நலந்திட்டங்களுக்கு ஊடாக அனைத்து தமிழ் மக்களையும் தமிழ் மக்கள் கூட்டமைப்பினுள் வழிப்படுத்தி உள்வாங்கி வடக்கு கிழக்கு முழுவதிலும் வாழ்கின்ற மக்களுக்கு தன்னிறைவான வாழ்க்கை முறையினை உருவாக்குவோம்.

06. எமது முறையான கட்டமைப்பின் ஊடு வடக்கு கிழக்கில் ஏற்படுகின்ற மாற்றங்களை தெற்கு அரசியலால் கையாள முடியாத சூழலை உருவாக்குவதன் ஊடாக தமிழ் மக்கள் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபு ரீதியிலான தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கச் செயற்படுவோம்.

07. ஜனநாயக ரீதியிலே சிறந்த அபிவிருத்தியுடன் கூடிய நிறைவான நிலையானது வாழ்க்கை முறையினை எமது ஈழத்தமிழ் மக்களுக்கு உருவாக்குவதுடன், பூலோக அரசியல் நகர்வுகளையும் பூலோக நலன்களையும் கருத்தில் கொண்டு புதிய நலத் திட்டங்களையும் உருவாக்கி சிறப்புர தமிழ் மக்கள் கூட்டமைப்பாக தொடர்ச்சியாக ஜனநாயக வழியிலே இயங்குவோம்.

நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல தமிழ் மக்கள் தாங்கள் எதிர்பார்க்கின்ற மாற்றத்திற்கான களத்தினை நாம் உருவாக்கியதுடன் நாம் எமது இலக்கின் வெற்றியை உறுதி செய்தவர்களாக ஈழத்தமிழ் மக்களின் வெற்றிக்கான பாதையினை மக்கள் மயப்படுத்துவதுடன் எமது மக்கள் சரியான மாற்றங்களுடன் அவர்கள் எமக்கான ஆணையினை வழங்குவதோடு தான் சரியென உணர்ந்த எமது வெற்றி பாதையிலே ஒற்றுமையாகவும் தமது முழுமையான அர்ப்பணிப்புடனும் அனைவருமாக அணி திரண்டு செயலாற்றி வெற்றிப் பாதையிலே களமாட வேண்டும். 

காலத்தின் தேவையை உணர்ந்து தாமாக முன்வந்து தாம் ஏற்ற பாதையில் முழுமையாக தம்மை அர்ப்பணித்து செயல்பட்டவர்கள் எமது கடந்த கால இளைஞர்கள் என்பதை நினைவுப்படுத்தி என்றும் எமது இளைஞர்களிடம் எமது இனத்தின் இயல்பு மங்காது என்பதை நினைவில் வைத்து ஒவ்வொருவரும் இதனை உணர்ந்து செயற்படுவோம் - என்றார்.

அண்மைய பதிவுகள்