உலக அளவில் தற்போது பயன்படுத்தக்கூடிய நிலையிலுள்ள அணுஆயுதங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இதில் சீனா வசம் சுமார் 500 அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் பாகிஸ்தானை விட இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் அதிகம் உள்ளதாகவும் சுவீடன் நிறுவனமான ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு அறிக்கையில் உலக நாடுகளின் வசமுள்ள அணு ஆயுதங்கள் குறித்த தகவல்கள் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, பிரிட் டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா, இஸ்ரேல் ஆகிய ஒன்பது உலக நாடுகள் அணு ஆயுத சக்தியை கொண்டுள்ளன.
அந்த வகையில் இந்த நாடுகளின் வசமுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை ஆண்டு தோறும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் இந்தியாவின் கைவசம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 172 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஜனவரி மாத கையிருப்பின் தகவல். பாகிஸ்தான் வசமுள்ள அணு ஆயுதங்களின் எண் ணிக்கை 170 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 இல் இந்தியா தனது அணு ஆயுதங்களை விரிவு செய்ததாகவும், இதற்கு நவீன முறையைப் பின்பற்றியதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீண்ட தூரத்திலுள்ள இலக்கை எட்டும் வகையில் அணு ஆயுதம் சார்ந்த மேம்பாடுகளை இந்தியா மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் வசம் அணு ஆயுதங்கள் அதிகம் உள்ளன.
மேலும், உலகின் ஒட்டுமொத்த அணு ஆயுத கையிருப்பில் சுமார் 90 சதவீதத்தை இந்த இரண்டு நாடுகளும் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் ஒப்பிடும் போது சீனாவின் வசம் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை சற்று குறைவாகவே உள்ளது.
கடந்த ஓராண்டில் உலக நாடுகளின் வசம் ஒட்டுமொத்தமாக அணு ஆயுதங்களின் எண்ணிக்கை சுமார் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதற்காக கடந்த ஓராண்டில் மட்டும் உலக நாடுகள் சுமார் 91. 3 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளன. இதில் கடந்த ஆண்டில் மட்டும் இந்தியா சுமார் 2. 7 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது.
முதலிடத்தில் உள்ள அமெரிக்கா 51. 5 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது. சீனா 11. 9 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது.
உலக அளவில் தற்போது பயன்படுத்தக்கூடிய நிலையிலுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 9,585 ஆகும்.
இதில் சீனா வசம் சுமார் 500 அணு ஆயுதங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 410 என இருந்தது குறிப்பிடத்தக்கது.