பாராளுமன்றத் தேர்தலில் வேறொரு கை விரலில் மை பூசப்படும்.-- தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் தெரிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலில் பூசிய மை சிலவேளை அழியாமலிருக்கலாம். அதற்காக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வேறொரு கை விரலில் மை பூசப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிந்தக உடகம தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவும் தகவல் தொடர்பாடல் அமைச்சும் இணைந்து அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வை நேற்று வெள்ளிக்கிழமை அம்பாறையில் நடத்தியது.
அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த செயலமர்வில் அம்பாறை அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம தலைமை வகித்தார்.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ. ஜெகராஜன், உதவித் தேர்தல்கள் ஆணையாளர் கசுன் அத்தநாயக்க மற்றும் தகவல் தொடர்பாடல் அமைச்சின் உதவிப் பணிப்பாளர் திலகரத்ன, நீதிக்கும் புலனாய்வுக்குமான மேலதிக ஆணையாளர் குலரத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
"ஊடக தர்மத்துடன் தேர்தலை அணுக வேண்டும். வாக்குச் சாவடிக்குள் எந்தக் காரணம் கொண்டும் புகைப்படமோ வீடியோவோ எடுக்க முடியாது.
வெளியில் அதனை செய்யலாம். ஐந்து பேருக்கு உட்பட்டவர்கள் வேட்பாளர் இல்லாமல் பிரசார நடவடிக்கையில் வீடு வீடாக செல்லலாம்.
வேட்பாளர் புகைப்படம் தரித்த வாகனத்தில் வேட்பாளர் கட்டாயம் இருக்க வேண்டும்"- என்றும் குறித்த செயலமர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.