12 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு பருத்தித்துறை நீதிமன்று உத்தரவு
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நிபந்தனை அடிப்படையில் 12 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்ட போதிலும் கைது நடவடிக்கையின் போது கடற்படையினரை தாக்கிய குற்றச்சாட்டு வழக்கில் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த மீனவர்கள் நிபந்தனை அடிப்படையில் பருத்தித் துறை நீதிமன்றினால் கடந்த நவம்பர் 27ஆம் திகதி விடுவிக்கப்பட்டிருந்தனர்.
எனினும் கடற்படையினரின் படகைச் சேதப்படுத்தி அதிலிருந்து இரண்டு கடற்படையினரைத் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட் டது.
இந்த வழக்கில் குறித்த 12இந்திய மீனவர்களும் நேற்றுமுன்தினம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கடற்படையின் படகுக்கு 8 லட்சம் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இழப்பீட்டை பெற்றுத்தர ஆவன செய்யுமாறும் கடற்படையினரினால் பருத்தித்துறை பொலிஸாரூடாக கோரப்பட்டது.
அதற்கமைய இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அதுவரை மீனவர்களை எதிவரும் ஜனவரி முதலாம் திகதி வரை விளக்கமயலில் வைக்குமாறு நீதிவான் கிருசாந்தன் பொன்னுத்துரை உத்தரவிட்டுள்ளார்.