புவிசார் அரசியல் ஒழுங்கில் இலங்கை அரசியலை கட்டுப்படுத்தும் போட்டியில் தமிழ் தேசிய உறுதிப்பாடும் அதற்கான தளத்தில் தமிழ் பொது வேட்பாளரின் வகிபாகமும்.

புவிசார் அரசியல் ஒழுங்கில் தவிர்க்க முடியாத நெருக்கடிகளை உலகம் இன்று சந்திக்கின்றது.

உலக ஒழுங்கை தீர்மானிக்கும் போட்டியில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளும் அவற்றால் உருவாக்கப்பட்ட சர்வதேச கூட்டிணைவுகளுக்கும் , ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் சவாலாக பிரேசில், ரஷ்சியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா கூட்டணியாக உருவான BRICS+ கூட்டணி மேலும் ஈரான் உட்பட்ட பல நாடுகளின் கூட்டணியாக நாளுக்கு நாள் பலம் பெறுவது உலக ஒழுங்கில் அரசியல் நோக்கர்களால் ஆழமாக பார்க்கப்படுகின்றது.

உலக ஒழுங்கை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக பார்க்கப்படும் பொருளாத வலுவிலும் , இராணுவ வலுவிலும் BRICS+ கூட்டணிக்கே அதிக பலம் உள்ளதாக நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

BRICS+ கூட்டணியில் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெறாத நாடுகள் கூட இணைந்துள்ளன என்ற செய்தி அமெரிக்கா சார் மேற்குலகத்திற்கு பெரும் சவாலான செய்தியாகவே பார்க்கப்படுகின்றது.

அண்மையில் BRICS+ கூட்டணி நாடுகள் சேர்ந்து புதிய நாணயத்தையும் வெளியீடு செய்திருந்தார்கள். இது பொருளாதார ஒழுங்கை தீர்மாணிக்கும் சக்தியாக BRICS+ கூட்டணி நாடுகள் மாற்றமடைந்துள்ளதை காட்டுகின்றது.

இந்த நிலையில் இந்து சமுத்திர புவிசார் அரசியல் ஒழுங்கில் இலங்கை ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பாக காணப்படுகின்றது என்பதுடன் இயற்கையாகவே பாதுகாப்பு மேலோங்கிய அரனாகவும் இலங்கை காணப்படுவதால் இலங்கையின் முழுமையான அரசியலை கட்டுப்படுத்துவதற்கு அமொரிக்கா சார் மேற்குலக நாடுகளும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், BRICS+ கூட்டணி நாடுகளும் போட்டி போடுகின்றன என்பதை நாம் ஆழமாக அவதானிக்க வேண்டும்.

இதன் இடையே இந்தியா, சீனா, அமெரிக்கா நாடுகளுக்கு தனிப்பட்ட முறையிலும் இலங்கையின் அரசியலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணப்பாடு மேலோங்கியுள்ளதை சில அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இங்கு ஒருவிடையத்தை நாம் ஆழமாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு நாட்டின் அரசியலை கட்டுப்படுத்துவதற்கு பலமாக பயன்படுத்தப்படும் தந்திரோபாயம்தான் பிரித்தாளும் தந்திரோபாயம்.

இதன் அடிப்படையில் இலங்கையின் அரசியலை கட்டுப்படுத்த சிங்களத் தேசிய மக்களின் அரசியலையும் , தமிழ் தேசிய மக்களின் அரசியலையும் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியில் பூகோள சக்திகள் முனைப்புக் காட்டுவதை நாம் தற்போது காண முடியும்.

புவிசார் அரசியல் ஒழுங்கில் இலங்கை அரசியலை கட்டுப்படுத்தும் போட்டியில் தமிழ் தேசிய உறுதிப்பாடும் அதற்கான தளத்தில் தமிழ் பொது வேட்பாளரின் வகிபாகமும்.

இந்நிலையில் தமிழ் தேசிய அரசியல் மிகவும் பலமான சக்தியாகவே இலங்கை அரசியலில் மாத்திரமின்றி இந்து சமுத்திர பிராந்திய அரசியலிலும் பார்க்கப்படுகின்றது.

காரணம் இந்து சமுத்திர பிராந்தியத்தில் அரசியலை தேசிய இனங்களின் அரசியலாக நோக்கினால் மூத்த மொழிவழி தேசிய இனங்களின் அரசியல் என்ற அடிப்படையில் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட தமிழ் தேசிய இனத்தின் அரசியல் தீர்மானிக்கும் சக்தியாகவே பூகோள அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இன்று பூகோள அரசியலை கட்டுப்படுத்த போட்டிபோடும் சக்திகள் இலங்கை அரசியலை முழுமையாக கட்டுப்படுத்த முடியாவிட்டால் அவர்களின் அடுத்த தெரிவாக இருப்பது இரண்டாக பிரித்தாவது ஒருபகுதியை கட்டுப்படுத்துவதாக கட்டாயம் இருக்கும் இந்த இடத்தில் ஈழத் தமிழர்களின் தமிழ் தேசிய அரசியல் வலுவாக இருத்தல் வேண்டும்.

தமிழ் தேசிய அரசியலின் வலு என்பது ஒரு கொள்கையின் பால் பிணைப்புற்று தமிழ் தேசியத்தின் பால் பற்றுக் கொண்டு எமது மக்களுக்காக அரசியல் உறுதிபூண்டு நிற்பதாகும்.

இங்கு ஒரு சவால் உள்ளது பூகோள சக்திகள் இலங்கை அரசியலை பிரித்து கையாளும் நிலையில் முடிவுகள் வகுக்கும் போது தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக இணைந்து இருப்பதை தடுப்பதற்கு பல நயவஞ்சக சூழ்ச்சிகள் இடம்பெற வாய்புள்ளது.

இதன் அடிப்படையிலை தமிழ் பொது வேட்பாளர் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்பட வேண்டும் என்ற கோசம் வலுப்பெறுகின்றது.

ஆனால் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை தடுக்கும் சக்திகள் இதை தடுப்பதற்கு பலவழிகளிலும் முனைப்பு காட்டுகின்றார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது.

இலங்கை அரசியலை முழுமையாக கட்டுப்படுத்தும் முயற்சியில் பல சவால்கள் பூகோள ஒழுங்கில் இருக்கின்றது.

ஏற்கனவே இலங்கையின் பொருளாதக் கட்டுப்பாட்டை சர்வதேச நாணய நிதியமும், உலக வங்கியும் தீர்மானித்து கட்டுப்படுத்தும் அதே வேளை இராணுவ கட்டுப்பாட்டில் பலமாக இருக்கின்ற புலனாய்வுத் துறையை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக மேற்குலக அரசியல் ஆய்வாளர்களா கூறுகின்றனர்.

இந்த நிலை BRICS+ கூட்டணிக்கும் , தனிப்பட்ட முறையில் இந்தியாவிற்கும் பெரும் சவாலாக மாறியிருக்கின்றது என்பதை செயல்களில் இருந்து அவதானிக்க முடியும்.

ஒரு நாட்டின் இறையாண்மையை தீர்மானிக்கும் மிக முக்கியமான காரணிகளான பொருளாதார கட்டுப்பாடும், இராணுவக் கட்டுப்பாடும் இலங்கையில் பெரும் சவாலுக்கு உள்ள நிலையில் தமிழ் மக்கள் மிகவும் முக்கியமான தீர்மானமிக்க காலப்பகுதியில் உள்ளோம் என்பதை தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு தேசிய இனம் அரசியலில் வலுப்பெற வேண்டும் என்றால் எந்த சக்திகளின் கட்டுப்பாடும் இன்றி மக்களுக்கான அரசியலை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் பூகோள அரசியல் நெருக்கடிக்குள் சிக்குண்டு நாளுக்கு நாள் சிதைவடையும் இலங்கை அரசியலுக்குள் தமிழ் மக்கள் தங்களை அரசியலில் வலுவான சக்தியாக நிலைநிறுத்துவதற்கு ஒரே ஒரு மாற்று வழியாக தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படல் வேண்டும்.

பூகோள அரசியல் ஒழுங்குகள் மாற்றமடையும் போது ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் மரபுவழி அரசியல் அணுகுமுறைகளையும் மாற்ற வேண்டும்.

அப்போதுதான் எமது மக்களின் அரசியல் மேலாதிக்க தன்மையினையும் உறுதியினையும் தக்கவைக்க முடியும்.

ஜீவரெத்தினம் தவேஸ்வரன்

20.05.2024